எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், உத்தரபிரதேச சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் மதமாற்றத் தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. திருமணம் உள்பட எந்த வகையிலும் கட்டாய மதம் மாற்றம் செய்யப்படுவதை இச்சட்டம் தடை செய்கிறது.
உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில், ’சட்டவிரோத மதம் மாற்றத்தை தடை செய்யும் அவசரச் சட்டம்’ கடந்த நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. நவம்பர் மாதமே முதல் வழக்கை உ.பி., போலீஸ் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
அவசரச் சட்டத்திற்கு பதிலாக தற்போது சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதா, சட்ட மேலவைக்கு அனுப்பப்படும். பின், ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், சட்டம் நடைமுறைக்கு வரும்.உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
சட்டம் என்ன சொல்கிறது?
இந்த புதிய சட்டத்தின் படி,திருமணம் உள்ளிட்ட எந்த வகையிலும் கட்டாய மதம் மாற்றம் செய்தது உறுதியானால், 10 ஆண்டுகள் வரை ஜாமீனில் வெளி வரமுடியாத சிறை தண்டனை வழங்கப்படும்.
இச்சட்டத்தில் உள்ள விதிகள் மீறப்பட்டால், 15,000 அபராதமும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் கொடுக்கப்படும். சிறுமிகள், பெண்கள் மற்றும் தலித், பழங்குடியினர் மதம் மாற்றம் செய்யப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறையும், 25,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், மொத்தமாக மதம் மாற்றம் நடைபெற்றால், 10 ஆண்டுகள் வரை சிறையும் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்கிறது இந்த சட்டம்.
மதம் மாறிய பிறகு ஒருவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அவர்கள் மாவட்ட நீதிபதியிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் இந்த சட்டம் கூறுகிறது.
ஒருவர் மீது மதம் மாறியதற்கான புகார் எழும் பட்சத்தில், 'மதமாற்றம் செய்யப்படவில்லை' என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, குற்றம் சாட்டப்பட்ட நபர் மற்றும் மதம் மாறியவர் மீதுதான் உள்ளது.
Also Read: உ.பி லவ் ஜிஹாத் வழக்கு: ஆதாரமில்லை என விடுதலை செய்யப்பட்ட கணவர்... உறுதியான மனைவியின் கருச்சிதைவு!
மேலும் ஒருவர் கட்டாயத்தின் அடிப்படையில் மதம் மாறினால் , பாதிக்கப்பட்டவரின் பெற்றோர், சகோதரர், சகோதரி, அல்லது ரத்த சொந்தம், மற்றும் தொடர்புடைய வேறு எவரும் புகார் அளிக்கலாம். எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிறது சட்டம்.
http://dlvr.it/RtWp5p