வருகின்ற திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ள சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பள்ளி மாணவிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறார். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஏழாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை இவர் அறிமுகப்படுத்தவுள்ளார். ஆந்திர முதல்வரின் இந்த அறிவிப்பு பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக ஒவ்வொரு வருடமும் 41.4 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள், உறைவிடப் பள்ளிகள் போன்றவற்றில் வருகின்ற ஜூலை ஒன்றாம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவிக்கும் மாதம் 10 சானிட்டரி நாப்கின்கள் வீதம் ஆண்டுக்கு 120 நாப்கின்கள் வழங்கப்படவுள்ளன. இவை தவிர மாநிலம் முழுவதும் இருக்கின்ற, பெண்களால் மட்டுமே நடத்தப்படும் 'சேயுதா' என்கிற சில்லறை வணிகக் கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் மலிவுவிலையில் விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.School Students
இது ஒருபுறமிருக்க மாணவிகள் போட்டித் தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்வதற்குத் தேவையான கோச்சிங்குகளையும் அரசே வழங்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கல்வி கற்கவேண்டியதன் அவசியத்தை தங்கள் அரசு நன்கு உணர்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஆந்திர முதல்வர், அப்படி போட்டித் தேர்வுகளுக்காக அரசு நடத்தும் பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவிகளுக்கு ‘அம்மாவோடி திட்டத்தின்(AMMAVODI SCHEME)' கீழ் லேப்டாப்பும் வழங்கப்படும் என்று சொல்லி மாணவிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார்.
“போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை கடமைக்குக் கொடுக்காமல் அந்தந்தத் துறை சார்ந்த வல்லுநர்களின் உதவியோடு மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சியை அளிக்க இருக்கிறோம். குறிப்பாக இதுபோன்ற பயிற்சிகளை அதிக அளவிலான மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளும்படி செய்வதே எங்களின் நோக்கம்” என்று ஜெகன் மோகன் ரெட்டி சொல்லியிருப்பது அம்மாநில மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறது.
இவை ஒருபுறமிருக்க, வருகிற மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தன்று ஆந்திர காவல்துறையில் பணியாற்றும் அனைத்துப் பெண்களுக்கும் அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அங்கன்வாடியில் பணிபுரியும் பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனையையும் அரசு நடத்தவுள்ளது.women's day
பெண்களின் பாதுகாப்பிற்காக 'டிஷா' செயலியை(DISHA APP) அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் பெண்கள் தங்களது போனில் இந்த டிஷா செயலியைப் பதிவிறக்கம் செய்தால் ஸ்மார்ட் போனின் விலையில் 10% தள்ளுபடி கொடுக்கப்படும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டு அசத்தியுள்ளார் ஆந்திர முதல்வர்.
நன்று!
http://dlvr.it/Rv5TFh
http://dlvr.it/Rv5TFh