
இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ளது கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட். பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்த தேயிலை எஸ்டேட்டில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே, அவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டிக்கொடுத்துள்ளது எஸ்டேட் நிர்வாகம். 30 வீடுகளைக் கொண்ட அப்படியான ஒரு குடியிருப்புதான்... பெட்டிமுடி.பெட்டிமுடி
Also Read: மூணாறு: மீட்கப்படாத நான்கு உடல்கள்... அதிர்ச்சியளித்த அறிக்கை! - துயரத்தில் பெட்டிமுடி மக்கள்
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி இரவு பெய்த கனமழை, பெட்டிமுடி மக்களை காவு வாங்கும் என யாரும் நினைத்திருக்கவில்லை. நாள் முழுவதும் தேயிலைத் தோட்டத்தில் கால் கடுக்க நின்று இலைபறித்துவிட்டு வீடு திரும்பியவர்கள், இரவு உணவு அருந்திய பின்னர் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர்.
சுமார் 11.30 மணிக்கு, பெரிய சத்தம் ஒன்று கேட்க, உறக்கத்தில் இருந்த அனைவரும் கண்விழிப்பதற்குள், பெரிய பெரிய பாறைகள் உருண்டு வந்து வீடுகளை உடைத்து நொறுக்கியது. அதன் மீது மணல் சரிந்து குவிந்தது. தொடர்மழை, தேயிலை எஸ்டேட்டின் ஒரு பகுதியை வலுவிழக்கச் செய்து, நிலச்சரிவை ஏற்படுத்தியிருந்தது. பெட்டிமுடி
11 பேர் அதிஷ்டவசமாகப் பிழைத்தாலும், குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 70 பேர் மண்ணில் புதைந்துபோயினர். தகவல் அறிந்து, மீட்புப்படை சம்பவ இடத்திற்கு வர மறுநாள் மதியம் ஆனது. வனத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மீட்புப் படை, தன்னார்வலர்கள் என சுமார் 500 பேர், தொடர்ச்சியாக 1 மாதம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நாள்தோறும் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. 4 பேரின் உடல்கள் இப்போதுவரை மீட்கப்படவில்லை.
பெட்டிமுடி கோர சம்பவத்தில், மீட்புப்பணியின் போக்கை `குவி’ என்ற வளர்ப்பு நாய் மாற்றியது என்றே சொல்ல வேண்டும். சம்பவம் நடந்த மறுநாள் மீட்புப் பணி துவங்கப்பட்டது. மணல் குவியல்களுக்குள் இருந்த உடல்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் தேடிக்கொண்டிருந்தது மீட்புப் படை. அவர்களுக்கு நடுவே, செந்நிற நாய் ஒன்று அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தது. வரிசையாகத் தோண்டி எடுக்கப்படும் உடல்களால், அந்த இடமே பரபரப்பாக காட்சியளித்தது. இதில், அந்த நாயை யாரும் கண்டுகொள்ளவில்லை. பெட்டிமுடி
ஒரு கட்டத்தில், அந்த நாயில் செயல்கள் அனைவரையும் கவனிக்க வைத்தன. தன் எஜமானரை அந்த நாய் தேடுவதை உணர்ந்த மீட்புப் படையினர், அதனை கண்காணிக்க ஆரம்பித்தனர். நீரோடை ஒன்றின் அருகே போய் நின்ற அந்த நாய், தொடர்ச்சியாகக் குரைக்க, அந்த இடத்தினை தோண்டியது மீட்புக் குழு. அங்கே இரண்டை வயதுக் குழந்தையின் உடல் இருந்தது. அக்குழந்தையின் பெயர் தனுஷ்கா. அக்குழந்தையின் வளர்ப்பு நாய்தான் குவி. இச்சம்பவம் மீட்புப் பணியில் இருந்த அனைவரையும் உலுக்கியது.
உடனடியாக, திருச்சூரில் இருந்து மாயா, டோனா என்ற இரண்டு போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. அவற்றின் உதவியுடன் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர் மழை மற்றும் குளிர் காரணமாக, போலீஸ் மோப்ப நாய்கள் நோய்வாய்ப்பட்டன. வேறு வழியின்றி போலீஸ் மோப்ப நாய்களைத் திருப்பு அனுப்பிய மீட்புக் குழு, குவியின் உதவியுடன் புதையுண்ட உடல்களைத் தேட ஆரம்பித்தது. அதன் பலனாக சிலரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.மீட்புக் குழுவினருடன் குவி
குவியின் அதீத திறமையைக் கண்ட மோப்ப நாய் பயிற்சியாளர் அஜித், குவியுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். தொடர்ந்து, மாநிலக் காவல்துறை, இடுக்கி மாவட்ட நிர்வாகம் மற்றும் கேரள வன விலங்கு வாரியமான வனசமரச சமிதி அமைப்பு ஆகியவற்றின் ஒப்புதலோடு, குவியை தத்தெடுத்துக் கொண்டார். முறையான பயிற்சிக்குப் பின்னர், குவி, இடுக்கி மாவட்ட காவல்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த தனுஷ்காவின் குடும்பத்தில், அக்குழந்தையின் பாட்டி பழனியம்மாள் (வயது 72) மற்றும் அவரது மகன் தீபன் ஆகியோர் மட்டும் பிழைத்து, படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய பழனியம்மாள், குவி பற்றி விசாரிக்க ஆரம்பித்துள்ளார். பயிற்சி கொடுக்கப்பட்டு கேரள காவல்துறையில் குவி சேர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைக்க, உள்ளூர் பத்திரிகைகள் மூலம், குவியை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார் பழனியம்மாள். பழனியம்மாளுடன் குவி.
இந்தச் செய்தி, திருவனந்தபுரத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்திற்கு தெரியவர, பழனியம்மாளிடம் குவியை ஒப்படைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, பழனியம்மாளை தேடி வந்த இடுக்கி மாவட்ட காவல்துறை அதிகாரிகள், குவியை அவரிடம் ஒப்படைத்தனர்.
சுமார் 8 மாதங்களுக்குப் பின்னர் பழனியம்மாளைக் கண்டதும், வாலை ஆட்டிக்கொண்டு, ஓடிச்சென்று அவருடைய காலைச் சுற்றி சுற்றி வந்தது குவி. இது அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
பழனியம்மாள் கூறும்போது, ``குவினு ஒரு தடவைதான் கூப்புட்டேன். ஓடி வந்துட்டா. என்னை மறக்காம ஞாபகம் வெச்சிருக்கா...” என சந்தோசத்துடன் சொன்ன பழனியம்மாள், ``என் குவியை எங்கிட்ட சேர்க்க உதவிய எல்லாருக்கும் நன்றி. இவ்வளவு மாசமா அவள பாதுகாப்பா வளர்த்த காவல்துறையினருக்கு நன்றி...'' என்றார் தழுதழுத்த குரலில்.
http://dlvr.it/Ry9Dcj