மும்பையைச் சேர்ந்த கங்காராம் - நிஷா தம்பதி, கடந்த 2019-ம் ஆண்டு வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவரிடமிருந்து பெண் குழந்தை ஒன்றை தத்து எடுத்து எடுத்தனர். அப்பெண்ணின் கணவர் இறந்ததால், அவரின் பிரசவ செலவுக்கும் இந்தத் தம்பதி நிதியுதவி செய்துள்ளனர். வறுமையின் காரணமாக ஒற்றை பெற்றோராக தன்னால் தன் குழந்தையை கவனிக்க முடியாது என்று, குழந்தையை அப்பெண் தத்துக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக இரு தரப்பினரும் முறைப்படி எழுதி ஒப்பந்தமும் செய்து கொண்டனர். ஆனால், `இந்த தத்தெடுப்பு சட்டப்படி செல்லாது' என்று கூறி குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகள் தத்து எடுத்த தம்பதியிடமிருந்து அக்குழந்தையை பெற்றுச் சென்றனர். Baby - Representative Image
இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட தம்பதி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் மும்பை உயர்நீதிமன்றமும் அந்தத் தம்பதியின் கோரிக்கையை நிராகரித்ததோடு, குழந்தை தொடர்ந்து அரசின் பராமரிப்பில் வளரவேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனால் குழந்தை பெற்ற தாயிடமும் இல்லாமல், தத்து எடுத்தவர்களிடமும் இல்லாமல் அரசின் பராமரிப்பில் வளர்ந்து வந்தது. இதையடுத்து அரசுத் தரப்பில் அக்குழந்தையை யாருக்காவது முறைப்படி தத்து கொடுத்துவிடக்கூடும் என்று கருதிய கங்காராம் தம்பதி, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். குழந்தையின் தாயாரும், அந்தத் தம்பதியிடம் தன் குழந்தையை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு விசாரணைக்கு வந்தபோது கங்காராம் தம்பதி, ``குழந்தையின் தாயார் வீட்டு வேலை செய்து வருகிறார். குழந்தை பிறந்த மாதமே முறைப்படி பதிவு ஆவணங்கள் தயார் செய்து குழந்தையை தத்து எடுத்துக்கொண்டோம். ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் எங்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து குழந்தையை பிடுங்கிச் சென்றுவிட்டனர். சட்ட நடவடிக்கைகளால் குழந்தை அன்பு மற்றும் அரவணைப்பு கிடைக்காமல் இருக்கிறது" என்று தெரிவித்தனர்.
Also Read: கொரோனா காலத்தில் குழந்தை தத்தெடுப்பு? வலை விரிக்கும் மோசடிக் கும்பல்... உஷார்!
மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆஜராகி, தத்தெடுப்பு ஆவணங்களை முறையாகப் பதிவு செய்யவில்லை என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குழந்தையைத் தத்தெடுத்த தம்பதியிடமே ஒப்படைக்க உத்தரவிட்டனர். ``வழக்கமாக இயற்கை நிகழ்வுகளால்தான் குழந்தைகள் ஆதரவின்றி போகும். ஆனால் இங்கு கோர்ட் உத்தரவால் குழந்தை ஒன்று ஆதரவற்று இருக்கிறது' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தது. தத்து கொடுக்கப்பட்ட குழந்தைக்கு தற்போது இரண்டரை வயதாகிறது.
http://dlvr.it/S24fj6
http://dlvr.it/S24fj6