கொரோனா தடுப்பூசி போடும் பணி நாட்டில் முழுவேகத்தில் நடந்து வருகிறது. மூன்றாவது கொரோனா அலை அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவிஷீல்டு தடுப்பூசியை பொறுத்தவரையில் இரண்டு டோஸ் தடுப்பூசிக்கு இடையே முதலில் 45 நாட்கள் இருக்கவேண்டும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு மத்திய அரசு இரண்டு கொரோனா டோஸ் இடையே 84 நாட்கள் இடைவெளி இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் மும்பையில் கவனக்குறைவால் பெண் ஒருவருக்கு 15 நிமிட இடைவெளியில் 3 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மும்பை அருகில் உள்ள தானேயில் காசர்வடாவ்லி ஆனந்த் நகரில் நடந்த தடுப்பூசி முகாமில் ரூபாலி(28) என்ற பெண் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அங்கு காத்திருந்த போது அவருக்கு அடுத்த 15 நிமிட இடைவெளியில் மேலும் 2 டோஸ் தடுப்பூசி ஊழியர்கள் போட்டுள்ளனர். தடுப்பூசி
ரூபாலியின் கையில் 3 தடுப்பூசி போட்டதற்கான அடையாளம் இருக்கிறது. தடுப்பூசியின் நடைமுறைகள் எதுவும் தெரியாது என்பதால் மூன்று தடுப்பூசி போடுவது குறித்து அப்பெண் எதுவும் கேட்கவில்லை. இது குறித்து அப்பெண் தனது கணவரிடம் சென்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளூர் பா.ஜ.க கவுன்சிலர் மனோகரிடம் சென்று புகார் செய்தார். கவுன்சிலர் உடனே மாநகராட்சி கமிஷனர் சர்மாவை நேரில் சந்தித்து இது குறித்து விசாரிக்கவேண்டும் என்று கோரி எழுத்து பூர்வமாக மனுக்கொடுத்தார். 3 தடுப்பூசி போடப்பட்டுள்ள பெண்ணிற்கு முழுமையான உடல் பரிசோதனை செய்யவேண்டும் என்றும், அவருக்கு எதாவது உடல் நலக்கோளாறு ஏற்பட்டால் அதற்கான முழு செலவையும் மாநகராட்சி ஏற்கவேண்டும் என்றும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மனோகர் அளித்த பேட்டியில், ``மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் இது போன்று நடந்துள்ளது. ஒரே நேரத்தில் 3 தடுப்பூசி போட்டு எப்படி மக்களின் உயிரோடு விளையாடலாம்?” என்று கேள்வி எழுப்பினார். ஆரம்பத்தில் இது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் வைஷாலி தெரிவித்தார். ஆனால் மேயர் நரேஷ், இச்சம்பவம் நடந்ததை உறுதிபடுத்தியளித்தோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது குறித்து மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப்பிடம் கேட்டதற்கு, ``சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு எந்த வித பிரச்னையும் இல்லை. அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்றார். ஒரே நேரத்தில் 3 தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான்றிதழுடன் வேதாந்த்
இதனிடையே மத்திய பிரதேசத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக சான்றிதழ் வந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போபாலில் வசிக்கும் வேதாந்த் என்ற 13 வயது சிறுவனுக்கும் தடுப்பூசிபோடப்பட்டுள்ளதாக அவனது மொபைல் போனில் சான்றிதழ் வந்துள்ளது. ஆனால் அவரின் வயதை 53 என்று சான்றிதழில் குறிப்பிட்டுள்ளனர். இது போன்று அதிகமானோர் தங்களுக்கு தடுப்பூசி போடப்படும் முன்பாகவே சான்றிதழ் வந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக வேறு வேறு பெயர்களில் தடுப்பூசி போடப்பட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ``அதிகம் பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டோம் என்று சொல்வதற்காக இது போன்று ஊசி போடாதவர்களுக்கெல்லாம் தடுப்பூசி போட்டதாக அரசு கணக்கு காட்டிக்கொண்டிருக்கிறது” என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது.
http://dlvr.it/S2hKH1
http://dlvr.it/S2hKH1