கேரளாவில் அமல்படுத்தப்பட்டிருக்கும் பொதுமுடக்கம் பலனற்றதாகவும், அறிவியல்பூர்வமற்றதாக இருப்பதாகவும் இந்திய மருத்துவ சம்மேளனம் (IMA - Indian Medical Association) கேரள முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் தற்போது அமலில் இருக்கும் பொதுமுடக்கத்தில் மாற்றங்களைச் செய்யவேண்டும் என்றும் இந்திய மருத்துவ சம்மேளனம் கேரள அரசை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் கேரளாவில் மட்டும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.COVID-19
Also Read: கேரளா: கொரோனாவைத் தொடர்ந்து மிரட்டும் ஜிகா வைரஸ்! - தமிழக எல்லையில் கர்ப்பிணி உட்பட 14 பேர் பாதிப்பு
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், வாரத்தின் குறிப்பிட்ட சில நாள்களில் மட்டும் கடைகள் மற்றும் அங்காடிகளைத் திறப்பதற்கு கேரளாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்படி கடைகளைத் திறந்துவைத்தால் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள். அதுமட்டுமல்லாமல் கடைகள் திறக்கப்படும் நாள்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே கடைகளைத் திறந்துவைக்கவேண்டும் என்கிற உத்தரவு அமலில் இருப்பதால், ஒரே நேரத்தில் அதிக அளவிலான மக்கள் கடைகளில் கூடுகிறார்கள். இது பெருந்தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துவிடுகிறது என்கிறது இந்திய மருத்துவ சம்மேளனம்.
மேலும், கேரள அரசு தற்போது பின்பற்றிவரும் கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ சம்மேளனம் குறிப்பிட்டிருக்கிறது.
``கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை வீட்டிலேயே தனிமைப்படுத்துதல் என்பது நோயப்பரவலைத் தடுப்பதற்கு ஆரம்பகால தொற்றாக இருக்கும்பட்சத்தில்,அது கைகொடுத்திருக்கலாம்.
ஆனால் இப்போதோ பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்துதல் மட்டும் சரியான அணுகுமுறை அல்ல. பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு யாரிடமிருந்து நோய்த்தொற்று வந்தது என்பதையும், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டியது அவசியம்.
உதாரணத்திற்கு ஒரு வீட்டில் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதியானால் அவரை மட்டும் தனிமைப்படுத்திவிட்டு மற்ற உறுப்பினர்களை விட்டுவிடக்கூடாது. கேரளாவில் குடும்பம் குடும்பமாக மக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்" என்று கூறும் மருத்துவ சம்மேளனம், கேரள அரசு இதைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது. குறிப்பாக கொரோனா பாதித்த நபர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள சமூகக் கூடங்கள் (Community living centres) மற்றும் முதல்நிலை சிகிச்சை மையங்களை (First-line treatment centres) அமைக்கவேண்டும் என்றும் மருத்துவ சம்மேளனம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.Corona outbreak
Also Read: பினராயி விஜயனுக்கு குட்டு! - பரபரக்கும் கேரளாவின் புது அமைச்சரவை
இவை எல்லாவற்றுக்கும் மேலாக கேரள அரசு தடுப்பூசி திட்டத்தை திறம்படச் செயல்படுத்தவில்லை என்றும் இந்திர மருத்துவ சம்மேளனம் கூறுகிறது. ``கேரள அரசு தடுப்பூசி திட்டத்தில் தனியார் அமைப்புகளை இணைத்துக்கொள்ள மறுக்கிறது. இதன் காரணமாக தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது" என்று தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கும் இந்திய மருத்துவ சம்மேளனம், இந்தப் பெருந்தொற்று இன்னும் சில வருடங்களுக்கு நம்மைச் சுற்றியே இருக்கும் என்பதால் அதற்கேற்ற நீண்டகாலத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம் என்றும் கேரள அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.
http://dlvr.it/S3mxP5
http://dlvr.it/S3mxP5