கடந்த சில வாரங்களாக பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 102 ரூபாயைத் தாண்டி விற்பனையாகிவரும் சூழலில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை உயர்ந்திருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உயர்ந்து வருகிறது. இதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தப்பட்டிருப்பதும் மறைமுக காரணமாகும். இரு சக்கர வாகனங்களுக்கு மத்திய அரசு மானியம் 5,000 ரூபாயில் இருந்து 15,000 ரூபாயாக (ஒரு kWh-க்கு) உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தவிர, ஒவ்வொரு மாநில அரசுகளும் கூடுதலாக சில சலுகைகளை வழங்குகின்றன. எரிபொருள் செலவு உயரந்திருப்பது மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் உயர்ந்திருப்பது ஆகிய காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையில் தற்போது முன்னேற்றம் நிலவுகிறது. இந்தியாவில் கடந்த நிதி ஆண்டில் 1.86 கோடி வாகனங்கள் விற்பனையாகி இருக்கிறன. இவற்றில் 1.3 சதவீதம் மட்டுமே, அதாவது 2.3 லட்சம் வாகனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்கள். ஆனால், அடுத்த நிதி ஆண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு கணிசமாக உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உற்பத்தியை விட சந்தையில் தேவை அதிகமாக இருக்கிறது என ஹீரோ எலெக்ட்ரிக் நிர்வாக இயக்குநர் நவீன் முஞ்சால் தெரிவித்திருக்கிறார். ஒரு நாளைக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவருக்கு ரூ.100 செலவாகிறது. ஆனால், எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் அதிகபட்சம் இரு யூனிட் செலவாகும். இதற்கு சுமார் ரூ.15 செலவாகும். எனவே, 85 ரூபாய் மிச்சம் என்பது மிகப்பெரிய தொகை என்பதால் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது பொதுமக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை: மத்திய அரசு மட்டுமல்லாமல் 13 மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகனக் கொள்கையை அறிவித்திருக்கின்றன. டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் கூடுதல் சலுகை வழங்குகின்றன. இதனால் ஐசி என்ஜின் வாகனத்துக்கு ஆகும் செலவில் இந்த மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கலாம். நாட்டிலே மகாராஷ்டிராவில்தான் அதிக சலுகை வழங்கப்படுகிறது. இது தவிர பழைய எலெக்ட்ரிக் வாகனத்தை அழித்துவிட்டு புதிய வாகனம் வாங்கும்பட்சத்தில் கூடுதலாக ரூ.7000 சலுகை கிடைக்கும். மேலும், மகாராஷ்டிராவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும்பட்சத்தில் பேட்டரிக்கு 5 ஆண்டு வாரன்டி கிடைக்கும். குஜராத்தை எடுத்துகொண்டால் இரு சக்கர வாகனத்துக்கு அதிகபட்சம் ரூ.20,000 சலுகை கிடைக்கும். இது தவிர ஒவ்வொரு மாநிலமும் எலெக்ட்ரிக் வாகனத்துக்கு ஒவ்வொருவிதமான சலுகையை வழங்குகிறது. ரூ.499-க்கு புக்கிங் ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்யும் பட்சத்தில் ஓலா எலெக்ட்ரிக் வாகனத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் விலை மற்றும் வாகனத்தின் சிறப்பு அம்சம் உள்ளிட்ட தகவலை வெளியிடுவோம் என ஓலா தெரிவித்திருக்கிறது. டிவிஎஸ் ரூ.1000 கோடி முதலீடு எலெக்ட்ரிக் வாகன துறையில் போட்டி அதிகரித்து வருவதைப் பார்த்து டிவிஎஸ் கவலைப்படவில்லை. 5kWh முதல் 25kWh வரையிலான எலெக்ட்ரிக் வானங்களை தயாரிக்க டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது. இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த 24 மாதத்தில் நிறுவனத்தின் தயாரிப்புகள் வெளியாகும் என டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுதர்ஷன் வேணு தெரிவித்துள்ளார். இதற்காக 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றன. இந்திய சந்தைக்கும் மட்டுமல்லாமல் வெளிநாட்டு சந்தைக்கும் ஏற்ற வகையில் இந்த வாகனம் இருக்கும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனத்துறையின் ஏற்றம் இப்போது தொடங்கி இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பெரிய ஏற்றம் இருக்கும் என பல நிறுவனங்களும் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. - வாசு கார்த்தி
http://dlvr.it/S3xVJy
http://dlvr.it/S3xVJy