``கோயம்புத்தூர் டு திருச்சூர் (கேரளா) இடையேயான சுரங்கப்பாதை திறக்கப்பட்டுவிட்டது. 2 மணிநேரப் பயணம் இனி 10 நிமிடங்கள்தான். இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக இந்திய அரசுக்கு நன்றி. எந்தவொரு ஊடகமும் இதுபோன்ற நல்ல செய்திகள் பற்றிப் பேசுவதாகத் தெரியவில்லை'' - குஜராத் பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச் செயலாளரின் ட்விட்டர் பதிவு இது!
Coimbatore to Trichur Tunnel Opened.
2hours Journey is now 10Minutes.
Thanks to the Govt of india Infrastructure development.
May be no Media house will talk about such Good News. pic.twitter.com/mTZy9H1Umo— Ratnakar (@ratnakar273) August 9, 2021
இந்தப் பதிவின் கீழ் அந்தச் சுரங்கப்பாதையின் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. இந்தப் பதிவின் கீழுள்ள கமென்ட் பகுதியில் மோடி அரசுக்கு எக்கச்சக்க பாராட்டுகள் குவிந்திருந்தன.
``மோடி போல ஒரு தலைவர் இந்தியாவுக்குக் கிடைப்பது அரிது. இந்தச் சுரங்கப்பாதை மக்களின் நேரத்தையும், உயிரையும் சேமித்துக் கொடுத்திருக்கிறது. இதுபோன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இந்தச் செய்திகளையெல்லாம் மீடியா கவர் செய்யாது. அதைப்பற்றி மோடி ஜி-யும் கவலைப்படமாட்டார். மோடி ஜி வாழ்க!'' என்று மோடி அரசை பா.ஜ.க-வினர் சிலர் கமென்ட் பகுதியில் புகழ்ந்து தள்ளியிருந்தனர்.
ஆனால், நெட்டிசன்கள் பலரும் இந்தப் பதிவின் கீழ் கலாய் கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ``கோவையிலிருந்து திருச்சூர் 114 கி.மீ. ஒருவர் 114 கி.மீ தூரத்தை 10 நிமிடங்களில் கடக்க வேண்டுமென்றால், மணிக்கு 684 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும். அந்த வேகத்தில் சாலையில் செல்லும் வண்டிகளையும் பா.ஜ.க-வினரே அறிமுகப்படுத்தட்டும்'' என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.
மற்றொருவர் கப்பல் ஒன்று நீர் பாலத்தில் செல்வதுபோல படம் ஒன்றைப் பதிவிட்டு, ``ஜெர்மனியிலிருந்து கோவைக்கு 10 நிமிடத்தில் வந்துவிட்டோம். மோடி அரசுக்குக் கோடான கோடி நன்றி!'' என்று கலாய்த்திருந்தார்.சுரங்கப்பாதை
Also Read: `2021-ல் தேர்ச்சி பெற்றவர்கள் வேலைக்குத் தகுதியில்லை' HDFC வங்கியின் சர்ச்சை விளம்பரம் - உண்மை என்ன?இன்னொரு பதிவில், ``12 மணிக்குக் கோவை காந்திபுரத்திலிருந்து புறப்பட்டேன். சுரங்கப்பாதை வழியாக 12.10 மணிக்கு திருச்சூர் சென்றேன். அங்கே பழம் பொறி, குழா புட்டு சாப்பிட்டுவிட்டு 12.45 மணிக்குள் கோவைக்கு வந்துவிட்டேன். 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் இதுபோல ஏதாவது ஒரு திட்டத்தையாவது அமல்படுத்தியிருக்கிறதா?'' என்று கேலியாகப் பதிவிடப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
இந்தச் சுரங்கப்பாதை குறித்துத் தேடுகையில் இந்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பதிவு ஒன்று நமக்குக் கிடைத்தது. அந்தப் பதிவில், ``கேரளாவிலுள்ள குதிரன் சுரங்கப்பாதையின் ஒரு பக்கத்தை இன்று திறந்து வைத்திருக்கிறோம். இது கேரளத்தின் முதல் சுரங்கப்பாதை சாலை. இந்தப் பாதை தமிழ்நாடு, கர்நாடகாவுக்கான இணைப்பை மேம்படுத்தும். 1.6 கி.மீ நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை பீச்சி-வாசஹானி (Peechi- Vazahani) வனவிலங்கு சரணாலயம் வழியாக அமைக்கப்பட்டிருக்கிறது'' என்று ஜூலை 31 தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நிதின் கட்கரி.நிதின் கட்கரி
இதுகுறித்து பல்வேறு செய்தித் தளங்களிலும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்தச் செய்திகளை வைத்துப் பார்க்கையில், குதிரன் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இது திருச்சூர் - பாலக்காடு ஆகிய பகுதிகளை இணைக்கிறது என்பதும் தெரியவந்தது.
மேலும், இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்படுவதற்கு முன்பாக, சாலையின் இடையே குறுக்கிடும் மலையைக் கடக்க 3 கி.மீ தூரம் சுற்றி வரவேண்டிய நிலை இருந்ததாகவும், அந்தப் பாதை மோசமானதாக இருந்ததாகவும் மலையாள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தச் சுரங்கப்பாதையால் தற்போது சில நிமிடங்களில் அந்தப் பகுதியைக் கடக்க முடிகிறது என்பதும் செய்திகளில் சொல்லப்பட்டிருக்கின்றன!
http://dlvr.it/S5NR2d
http://dlvr.it/S5NR2d