குடும்ப வன்முறை காரணமாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கணவனை விட்டுப் பிரியும் மனைவி, குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்படுகிறார்.
இந்நிலையில் மும்பையில் விவாகரத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண் ஒருவருக்கு கர்ப்பத்தை கலைக்க மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட அப்பெண்ணை, கர்ப்பமானதில் இருந்தே அவரின் கணவர் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு போலீஸில் அப்பெண் புகார் செய்தார்.Court -Representational Image
Also Read: `வன்புணர்வு நடந்தது 11 நிமிடங்களே; எனவே தண்டனையைக் குறைக்கிறேன்!' - நீதிபதியின் அதிர்ச்சி தீர்ப்பு
கருவளர்ச்சி 17 வாரமாக இருந்த போதே கருவை கலைக்க அப்பெண் திட்டமிட்டார். ஆனால் போலீஸ் நிலையம், கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்ததில் நாள்கள் கடந்துவிட்டன. கருவை கலைக்க சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட 20 வாரத்தை அவர் கடந்துவிட்டார். இதனால் தற்போது தனது வயிற்றில் உள்ள 23 வாரக் கருவைக் கலைக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி அப்பெண் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவில் சம்பந்தப்பட்ட பெண், ``என் கணவர் நான் கர்ப்பமான நாளில் இருந்து என்னை அடித்து சித்ரவதை செய்து வந்ததார். தற்போது அவரிடமிருந்து விவாகரத்துக் கேட்டு கோர்ட்டில் விண்ணப்பித்து இருக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் நான் தொடர்ந்து கருவைச் சுமந்து கொண்டிருப்பது எனது மனநிலையை கடுமையாக பாதிக்கும். எனவே கருவைக் கலைக்க அனுமதிக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இம்மனு நீதிபதி உஜ்ஜால் புவன் மற்றும் மாதவ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பெண்ணை சோதித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் டாக்டர்களுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.
அக்குழு அப்பெண்ணை சோதித்துவிட்டு தாக்கல் செய்திருந்த அறிக்கையில், வயிற்றில் உள்ள கரு ஆரோக்கியமாக இருப்பதாகவும், குடும்ப வன்முறை காரணமாக சம்பந்தப்பட்ட பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், மனநிலை பாதிக்கப்பட்டவராக இல்லை என்றும், கவுன்சலிங் கொடுத்து சரி செய்ய முடியும் என்றும் தெரிவித்திருந்தனர்.
அரசு வழக்கறிஞர், அப்பெண்ணின் கருவைக் கலைக்க எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ``மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம், கருவால் கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் இருந்தாலோ, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக கடுமையான காயத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலோ அக்கருவைக் கலைக்க அனுமதிக்கிறது. மனுதாரரான கர்ப்பிணியின் முன் இருக்கும் முக்கியப் பிரச்னை, எதிர்கால பொருளாதார நிலை மற்றும் சமூக பிரச்னைகள். அவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. கருக்கலைப்பு
Also Read: `ஆண் குழந்தைதான் வேண்டும்’ ; 8 முறை கட்டாயக் கருக்கலைப்பு!-கணவன்மீது ஓய்வுபெற்ற நீதிபதி மகள் புகார்
மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம், மன அழுத்தம் தொடர்பாக தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை. இம்மனுவை தாக்கல் செய்துள்ள பெண் இக்குழந்தை பிறப்பதால் தனக்கு எந்த வித பொருளாதார உதவியும் கிடைக்காது என்றும், தனது கணவர் மூலம் உணர்வுபூர்வமான ஆதரவு கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவை இரண்டும் கிடைக்காமல் குழந்தையை வளர்த்து ஆளாக்குவது தன்னால் முடியாது என்றும், தனக்கு எந்த விதமான வருமானமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கருவை கலைக்க அனுமதிக்கவில்லையெனில் அப்பெண் நீங்காத சுமைக்கு ஆளாவதுடன் கடுமையாக மனரீதியாகவும் பாதிக்கப்படுவார்'' என்று தெரிவித்த நீதிபதிகள் அப்பெண்ணின் கருவைக் கலைக்க அனுமதி வழங்கினர்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் கருவைக் கலைக்க அனுமதிக்கலாம் என்று கோர்ட் தெரிவித்துள்ள இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo
http://dlvr.it/S5tGQc
http://dlvr.it/S5tGQc