இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், கேரளாவில் மட்டும் தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாதிப்புகள் இருக்கிறது. கேரள மாநிலத்தில் கடந்த 20-ம் தேதி வரை தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக இருபதாயிரம் என்ற அளவில் பதிவாகி ஆகிவந்தது. கடந்த 21-ம் தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது. 21-ம் தேதி 17,106 பேருக்கும், 22-ம் தேதி 10,402 பேருக்கும், 23-ம் தேதி 13,383 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கேரள மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம், அதாவது 24.08.2021 அன்று, திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் பழையபடி அதிகரித்தது. 24-ம் தேதி நிலவரப்படி 24,296 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கேரள மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நேற்றைய (25.08.2021) கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில மாதங்களை காட்டிலும் உச்சத்தை அடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 31,445 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 123 பேர் சுகாதாரப் பணியாளர்கள். மொத்தம் 1,70,292 பேர் இப்போது கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். நேற்று 20,271 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.கொரோனா டெஸ்ட்
இதுவரை 36,92,628 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பின்னர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 215 பேர் மரணமடைந்துள்ளனர். எனவே, கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 19,972 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனா டெஸ்ட் பாஸிட்டிவ் சதவீதம் 15.63 என்ற அளவில் இருந்த நிலையில், இப்போது டெஸ்ட் பாஸிட்டிவ் சதவீதம் 19.03 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் முழுவதும் 4,70,860 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா புதிய பாதிப்புக்களின் எண்ணிக்கை கடுமையாக உயரும் நிலையில் பரிசோதனையை அதிகரிக்க கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் நபர்களை பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களை விரைவில் கண்டுபிடித்து பரவலை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் பரிசோதனை அதிகரிக்கப்படும். பரவல் அதிகமாக உள்ள இடங்களிலும் பதிசோதனை துரிதபடுத்தப்படும். அனைவரும் தாமாக பரிசோதனைக்கு முன்வரவேண்டும். பாதிப்பு ஆரம்பத்திலே கண்டறியப்பட்டால் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க முடியும்" என்றார்.
கேரளாவில் ஓணம் பண்டிகைக்குப் பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மக்கள் பண்டிகை, திருவிழா, வீட்டு விசேஷங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Also Read: இரண்டாவது தவணையில் கொரோனா தடுப்பூசியை மாற்றிச் செலுத்தலாமா, பாதிப்பு ஏற்படுமா? | Doubt of Common Man
http://dlvr.it/S6LML6
http://dlvr.it/S6LML6