டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு இடைக்கால தடை கோரிய வழக்கில், துறை அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையை சேர்ந்த ஜானகி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் பணியிடத்திற்கான அறிவிப்பாணை ஆகஸ்ட் 25ல் வெளியிடப்பட்டது. தற்பொழுது டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆன்லைன் மூலம் ஒரு முறை பதிவு செய்து கொண்டவர்கள் வழங்கப்பட்ட அடையள எண்ணை கொண்டு அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால், தற்போது அரசு குற்றவியல் வழக்கறிஞர் நியமன தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க சென்றபொழுது, விண்ணப்பதாரரின் ஆதார் எண் கேட்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் ஆதார் எண் கொடுக்காவிட்டால் TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத நிலை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயமில்லை என தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையும் படிங்க... டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20% ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல் இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கவே ஆதார் எண்ணை கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண்ணை பதிவு செய்த நிலையில், 28 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை ஆதார் எண் பதிவாகவில்லை. இதனால் தகுதியிருந்தும் தேர்வு எழுத விருப்பம் இருந்தும், ஆதார் எண் பதிவு செய்யாதவர்கள், போட்டி தேர்வு எழுத இயலாத நிலை உள்ளது. எனவே போட்டித் தேர்வுகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், போட்டித் தேர்வர்கள் நலன் கருதி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “டிஎன்பிஎஸ்சி ஒரு முறை பதிவில் ஆதார் எண் பதிவு செய்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. ஒரு வாரத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் நியமன தேர்வுக்கு கடைசி தேதி முடிவடையவுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. மேலும் “உச்சநீதிமன்ற உத்தரவின்படி போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயமில்லை என தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு குறித்து டிஎன்பிஎஸ்சி உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
http://dlvr.it/S7m92Z
http://dlvr.it/S7m92Z