ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம், நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இடமாற்றம் குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யும் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு, தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து இருக்கிறேன். அதேபோன்று ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளேன். மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்துள்ளேன். சஞ்சீவ் பானர்ஜி இடமாற்றம் விவகாரத்தில் நான் சொல்லும் ஒரே பதில், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடம் மாற்றம் செய்தனர். ஆனால் அவர் உடனே ராஜினாமா செய்தார். ஆனால் அவர் ராஜினாமா செய்த பிறகு அவர் மீதான குற்றச்சாட்டுகள் வெளியே வந்தன. குறிப்பாக விதிமுறைகளை மீறி இடம் வாங்கியதாக புகார் எழுந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை என்பது நடைபெற்று வருகிறது. இது நீதித்துறைக்கு ஒரு களங்கமும் போன்று உள்ளது. நீதிபதிகளை பணி மாற்றம் செய்ய கொலிஜியத்துக்கு அதிகாரம் உள்ளது. இதுபோன்ற காலகட்டத்தில் கொலிஜியம் சில நீதிபதிகளிடம் கருத்துக்களை மட்டுமே கேட்கும். கொலிஜியம் ஏற்கனவே எடுத்த முடிவுகளை மாற்றுவது சற்று கடினம். தொடர்புடைய செய்தி: பதவியேற்ற 10 மாதங்களில் நீதிபதி சஞ்சிவ்பானர்ஜியின் இடமாற்றமா?-237 வழக்கறிஞர்கள் எதிர்ப்பு ஏற்கனவே கடந்த காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பக்தவச்சலம் என்பவரை மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு வந்தபோது அவரை அருகே இருக்கக்கூடிய கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக மாற்றினர். தொடர்ந்து அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் சஞ்சீவ் பானர்ஜி இடமாற்றம் விவகாரத்தில் கொலிஜியம் மீண்டும் பரிசீலனை செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் சஞ்சீவ் பானர்ஜி, தகில் ரமணியை போன்று ராஜினாமா செய்யாமல் கொலிஜியத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னைக்கூட ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வேறு மாநிலத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை கொலிஜியம் ஏற்றுக்கொள்ளவில்லை. கொலிஜியத்தின் முடிவை எதிர்த்து செல்வது சரியல்ல. அதையும்மீறி ‘ஏன் பணி மாற்றம் செய்ய உள்ளீர்கள்’ என்ற காரணத்தை கேட்டால் அவர்கள் எவ்வளவோ காரணத்தை தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. சஞ்சீவ் பானர்ஜி பணிமாற்றம் செய்யக்கூடாது என இவ்வளவு பேர் தெரிவிக்கும் பொழுது, அவரின் நேர்மை தெளிவாகிறது. ஆனால் அதேநேரம் சஞ்சீவ் பானர்ஜி விவகாரத்தில் பல்வேறு நடைமுறைச் சிக்கல் காரணமாகத் தான் கொலிஜியம் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. 75 நீதிபதிகளை சமாளித்து சென்றவருக்கு சிறந்த வாய்ப்பு வழங்கப்பட்டு பெரிய உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும்” என ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் தெரிவித்தார்.
http://dlvr.it/SCW4w4
http://dlvr.it/SCW4w4