கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ வனப்பகுதியில் 67.15 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணையைக் கட்ட முயன்று வருகிறது. இது சட்டவிரோதம் எனவும் இதனால் தமிழ்நாட்டின் நீர்பாசனத்துக்கும் குடிநீருக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் எனத் தமிழக விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக அரசும் மேக்கேதாட்டூ அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மத்திய அரசின் ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே இதுகுறித்து தெரிவித்துள்ள கருத்து, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேக்கேதாட்டூ அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்க முடிவு எடுத்திருப்பதாக அவரது பேச்சு அமைந்துள்ளதாகக் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். மேக்கேதாட்டூ அணைக்கு எதிரான போராட்டத்தைத் தமிழக மக்கள் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்கள்.அஸ்வினி குமார் சௌபே
Also Read: மேக்கேதாட்டூ - அலட்சியம் காட்டுகிறதா தமிழக அரசு?
இதுகுறித்து நம்மிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ``நாடாளுமன்றத்தில் கடந்த 7-ம் தேதி கர்நாடகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி உறுப்பினர் பிரஜ்வால் ரேவண்ணா மேக்கேதாட்டூ அணைக்கு அனுமதி கொடுப்பது பற்றிக் கேட்ட வினாவுக்கு, சுற்றுச்சூழல் - வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, மத்திய அரசு அனுமதி கொடுப்பதற்கான முயற்சியில் இருக்கிறது என்று விடை அளித்துள்ளார்.
ஒன்றிய அரசின் நீராற்றல் துறையும், காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக அரசின் வரைவு செயலாக்க அறிக்கையை ஏற்றுக்கொண்ட பின், மேக்கேதாட்டூ அணை கட்ட அனுமதிப்பது குறித்து ஒன்றிய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை முடிவு செய்யும் என்று அஸ்வினி சௌபே கூறியுள்ளார்.
நடைமுறை உண்மை என்னவெனில், ஒன்றிய நீராற்றல் துறை ஏற்கெனவே மேக்கேதாட்டூ அணைக்கான வரைவு செயலாக்க அறிக்கையைத் தன்னளவில் ஏற்றுக்கொண்டதுடன், காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்கச் செய்வதற்காக, அதற்கு அனுப்பி வைத்துள்ளது. அதன்பிறகு, காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு கூட்டத்திலும் மேக்கேதாட்டூ அணைக்கு ஒப்புதல் தெரிவிப்பதைத் தனது பொருள் நிரலில் வலிந்து சேர்த்து வருகிறது. பெ.மணியரசன்
தமிழ்நாட்டு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. இப்போது, சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை அமைச்சகம் அனுமதி தருவதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் மட்டுமே பாக்கியாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
மேக்கேதாட்டூ அணை ஒப்புதல் பற்றி விவாதிக்க முடியாது, அதற்கு ஒப்புதல் தரக்கூடாது எனத் தமிழ்நாடு தடுத்தால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தையே நடத்த மாட்டோம் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் சௌமித்ர குமார் ஹல்தர் கூறாமல் கூறுவதுபோல், கடந்த டிசம்பரிலிருந்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மூன்று முறை தேதி குறித்துவிட்டு, காலவரம்பின்றி ஒத்தி வைத்துவிட்டார்.
இப்போது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள சௌமித்ர குமார் ஹல்தர் இதற்கு முன் ஒன்றிய நீராற்றல் துறையின் தலைவராக இருந்தவர் என்பதும், இவர்தாம் மேக்கேதாட்டூ ஒப்புதலுக்கு, அதன் வரைவு செயலாக்க அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பி வைத்தவர் என்பதும் நாடறிந்த உண்மை.
மேக்கேதாட்டூ அணை கட்டினால் கர்நாடகத்தின் காட்டு உயிரினங்கள் வாழும் 2,925.50 ஹெக்டேர் நிலமும், 1869.50 ஹெக்டேர் காப்புக் காடுகளும், ஐந்து கிராமங்களும் நீரில் மூழ்கும் என்று கர்நாடக அரசு அளித்த வரைவு செயலாக்க அறிக்கை கூறுவதையும் அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே எடுத்துக் கூறுகிறார். ஆனாலும், அனுமதி அளிப்போம் என்று கூறியுள்ளார்.
மிகை நீர் மற்றும் குடிநீர் அணை என்று மேக்கேதாட்டூ அணைக்குப் புனைபெயர் வைத்துள்ளார்கள். இந்த அணையின் கொள்ளளவு 67.15 டி.எம்.சி காவிரியில் கர்நாடக மற்றும் மேட்டூர் அணைகள் நிரம்பி 67.15 டி.எம்.சி அளவுக்கு மிகை நீர் கடலில் கலந்த வரலாற்றைக் கடந்த 60 ஆண்டு காலத்தில் ஒரு தடவை கூட கண்டதில்லை. நடப்புக் காவிரித் தண்ணீர் ஆண்டில் வரலாறு காணாத பெருமழை பெய்து, காவிரியின் மிகை நீர் கடலில் கலந்தது. அதன் அளவு 42 டி.எம்.சி மட்டுமே. இவ்வளவு பெருமழை பெய்த இந்த ஆண்டும் தமிழ்நாட்டுக்கு மாதம்தோறும் திறந்துவிட வேண்டிய காவிரி நீரைக் கர்நாடக அரசு அந்தந்த மாதத்தில் திறந்து விடவில்லை. காவிரி நீர்
Also Read: மேக்கேதாட்டூ: `ஆபத்து நெருங்குகிறது; தமிழக அரசு என்ன செய்கிறது?' - கொந்தளிக்கும் மணியரசன்
எனவே, மேக்கேதாட்டூவில் அணை கட்டப்பட்டுவிட்டால் ஒரு சொட்டுக் காவிரி நீர் கூடக் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வராது. தமிழ்நாட்டுக் குடிநீரையும் பாசன நீரையும் காவு கொள்ள மத்திய – கர்நாடக பா.ஜ.க ஆட்சிகளின் சதித் திட்டத்தை முறியடிக்கத் தமிழ்நாடு அரசு என்ன எதிர்வினை ஆற்றப் போகிறது? தமிழ்நாட்டு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். காவிரி உரிமைச் சிக்கல் டெல்டா மாவட்டங்களின் உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக் குடிநீர் மற்றும் உணவு உற்பத்திக்கான சிக்கல் என்பதையும், தமிழ்நாட்டின் உரிமைச் சிக்கல் என்பதையும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு, கிளர்ந்து எழுந்து போராட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/SJfRbR