கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரைச் சேர்ந்தவர் ஷைபின். தொழில் அதிபரான இவர் சில அடியாட்களை வைத்து சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. ஷைபின் கடந்த மாதம் 24-ம் தேதி நிலம்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், `சிலர் என் வீட்டுக்குள் புகுந்து, என்னை கட்டிப்போட்டு ஏழு லட்சம் ரூபாய் மற்றும் லேப்டாப், மொபைல் போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்' என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து நிலம்பூர் போலீஸார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் அஷ்ரப் என்பவரை கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடிவந்தனர். அதில் 5 பேர் கடந்த 29-ம் தேதி திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு தங்களை பொய் வழக்கில் கைதுசெய்ய முயல்வதாக போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை கண்டோமெண்ட் போலீஸார் கஷ்டடியில் எடுத்ததுடன், அவர்கள் மீது வழக்கு இருப்பதால் நிலம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.கொலை வழக்கில் கைதான தொழில் அதிபர் ஷைபின்
நிலம்பூர் காவல்நிலைய போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது நெளஷாத் என்பவர் சில தகவல்களை கூறியதுடன் ஒரு பென் டிரைவையும் ஒப்படைத்தார். நெளஷாத் போலீஸாரிடம் கூறியதாக வெளியான தகவல் என்னவென்றால், "எங்கள் மீது புகார் அளித்திருக்கும் ஷைபினிடம் நாங்கள் அடியாட்களாக வேலை செய்தோம். அடிதடி, போதைபொருள் கடத்தல் என பல குற்ற சம்பவங்களில் ஈடுபடுள்ளோம். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த பாரம்பர்ய நாட்டு வைத்தியர் ஷாபா செரீப் என்பவரை ஷைபின் கடத்தச் சொன்னார்.
பாரம்பர்ய நாட்டு வைத்தியரான ஷாபா செரீப் மூல நோய்க்கு மூலிகை மருந்துகொடுத்து குணப்படுத்துவதில் கைதேர்ந்தவர். அவரை கடத்திக்கொண்டுவந்து மூலிகை மருந்து குறித்த ரகசியத்தை கேட்டறிந்து, அந்த மருந்தை நாமும் தயாரித்து பணம் சம்பாதிக்கலாம் என ஷைபின் கூறியதால் நாங்கள் கடத்தினோம். நிலம்பூரில் உள்ள ஷைபினின் வீட்டில் சுமார் ஒரு ஆண்டுக்கு மேல் தனி அறையில் சங்கிலியில் கட்டி வைத்து நாட்டு வைத்தியர் ஷாபா செரீபை கொடுமைப்படுத்தி மூலிகை ரகசியத்தை கேட்டோம். ஆனால் அவர் ரகசியத்தை சொல்ல மறுத்துவிட்டார். நாங்கள் செய்த கொடுமையால் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் இறந்துவிட்டார்.கொலை வழக்கில் கைதானவர்கள்
ஷைபினின் வீட்டு பாத் ரூமில், ஒரு மரக்கட்டையில் வைத்து இறைச்சி வெட்டும் கத்தியால் ஷாபா செரீபின் உடலை சின்ன துண்டுகளாக வெட்டி கவரில் அடைத்து, ஆற்றில் வீசினோம். அது சம்பந்தமான வீடியோ எங்களிடம் இருக்கிறது. இதற்கிடையே ஷைபினுக்கும் எங்களுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் நாங்கள் அவரைவிட்டு சென்றுவிட்டோம். இந்த கொலை குறித்து நாங்கள் வெளியே சொல்லிவிடுவோம் என நினைத்து எங்கள் மீது பொய்புகார் கொடுத்திருக்கிறார்" என நெளஷாத் கூறியுள்ளார்.
பாரம்பர்ய வைத்தியரை கொலை செய்த வழக்கில் தொழில் அதிபர் ஷைபின், நெளஷாத், அஷ்ரப், ஷிகாபுதீன் ஆகிய நான்குபேரை போலீஸார் கைது செய்துளனர். இதுபற்றி மலப்புரம் எஸ்.பி சுஜித் தாஸ் கூறுகையில், "மலப்புறம் நிலம்பூர் முக்கட்டா பகுதியைச் சேர்ந்த ஷைபின் என்பவர் அவரது வீட்டில் இருந்து பணம், லேப்டாப், மொபைல் ஆகியவற்றை அடையாளம் தெரியாத சிலர் திருடிச்சென்றதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி சுல்தான் பத்தேரி பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் என்பவரை கைது செய்தோம். மற்றவர்களை கைதுசெய்ய முடியவில்லை. அவர்கள் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தியதுடன், பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றனர்.
அவர்களை கண்டோமெண்ட் போலீஸார் பிடித்து நிலம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில் நெளஷாத் என்பவரிடம் நடத்திய விசாரணையில், மைசூரைச் சேர்ந்த ஷாபா ஷெரீப் என்ற நாட்டு வைத்தியரை கடத்திக்கொண்டுவந்து நிலம்பூரில் உள்ள ஷைபின் வீட்டில் வைத்து கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக தெரிவித்தார். ஏற்கனவே ஷைபினுடன் இணைந்து நெளஷாத் உள்ளிட்டவர்கள் பல குற்றங்களை செய்துள்ளனர்.மலப்புறம் எஸ்.பி சுஜித் தாஸ்
இதையடுத்து மைசூருக்குச் சென்று, ஷாபா செரீப் உயிருடன் இருக்கிறாரா என விசாரித்தோம். 2019 ஆகஸ்ட் 2-ம் தேதி அவரை காணவில்லை என புகார் பதிவுச்செய்யப்பட்டது தெரியவந்தது. எங்களிடம் இருந்த வீடியோவை காட்டி அந்த வைத்தியர் இவர்தானா என விசாரித்தோம். குடும்பத்தினர் அவர்தான் என அடையாளம் காட்டினர். கடத்தப்பட்டது மைசூர் வைத்தியர் என்பது தெரியவந்தது. ஷைபின் அஷ்ரப் வீட்டில் வைத்து 2020 அக்டோபர் மாதம் வரை அவரை கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஒருகட்டத்தில் வைத்தியரின் மார்பில் மிதித்தபோது அவர் சுருண்டுவிழுந்து இறந்துள்ளார். அவரின் உடலை சிறு துண்டுகளாக வெட்டி ஆற்றில் போட்டுள்ளனர். நெளஷாத், ஷிகாபுதீன், ஷைபின் அஷ்ரப் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறோம். இன்னும் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியது உள்ளது" என்றார்.
மூல நோயை குணப்படுத்தும் மூலிகை ரகசியத்துக்காக நாட்டுவைத்தியரை கடத்தி கொலை செய்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://dlvr.it/SQDHXm