தங்கள் மகனின் சடலத்தை கொடுப்பதற்கு மருத்துவமனை ஊழியர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் வேறு வழியின்றி அவரது வயதான பெற்றோர் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிஹார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் தாக்குர் (35). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர், கடந்த இரண்டு வாரங்களாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 6-ம் தேதி சஞ்சீவ் தாக்குரின் சடலம் முஸ்ரிகராரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோரை அழைத்த போலீஸார், இறந்து போனது அவர்களின் மகன் சஞ்சீவ் தாக்குர் தான் என்பதை உறுதிப்படுத்தினர்.
பின்னர் அவரது உடல் சதார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில், மகனின் சடலத்தை வாங்குவதற்காக அவரது தந்தை மகேஷ் தாக்குர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள், ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே சடலத்தை கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்த கூலித் தொழிலாளியான மகேஷ் தாக்குர், ரூ.50 ஆயிரம் பணத்தை திரட்டுவதற்காக அதே பகுதியில் தனது மனைவியுடன் கடந்த 3 நாள்களாக பிச்சை எடுத்து வருகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் சஞ்சீவ் தாக்குரின் உடலை உடனடியாக அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு லஞ்சம் கேட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிஹார் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
http://dlvr.it/SRvp27
http://dlvr.it/SRvp27