தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில், ``மதம் மாறினாலும் சாதி மாறுவதில்லை, சாதிய இழிவுகள் ஒழிவதில்லை" என்று கூறி, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீட்டுச் சலுகை கொடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ``பட்டியலின மக்கள் கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கு மாறினாலும் தீண்டாமை தொடரும் என தி.மு.க அரசு மறைமுகமாகச் சொல்கிறதா" என விமர்சித்தார்.வானதி சீனிவாசன் - ஸ்டாலின்
அதோடு, ``நீதிமன்ற வரம்புக்குள் இருக்கும் இந்த விவகாரத்துக்கு எதற்குத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்" என்றும் வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பினார். இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் தீண்டாமை இல்லை என தி.மு.க கூறும்போது அவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் என கேள்வியெழுப்பி, இந்தத் தனித் தீர்மானத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், `` `கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டரீதியான பாதுகாப்பும் உரிமைகளும் மதம் மாறிய பிறகும் கிடைக்க வேண்டும்' என மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் ஒன்றை முதல்வர் சட்டசபையில் நிறைவேற்றியிருப்பது உள்நோக்கம் கொண்ட வாக்குவங்கி அரசியல் என்பதோடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தி.மு.க மதவாத தீய சக்தியென்பதை இந்தத் தீர்மானமானது உறுதிசெய்கிறது.நாராயணன் திருப்பதி
இந்து மதத்திலிருந்த தீண்டாமையினாலேயே சமூகரீதியாகப் பட்டியலின மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) ஆணை 1950-ன்படி, இந்து மதத்திலிருந்து வேறுபட்ட மதத்தைச் சார்ந்த எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது. அதன் பிறகு 1956-ம் ஆண்டு, இந்து கலாசாரத்தை ஒட்டியே பின்பற்றியே சீக்கிய, புத்த மதத்திலும் தீண்டாமை இருப்பதாகக் குறிப்பிட்ட காக்கா காலேக்கர் ஆணைய பரிந்துரையை ஏற்று சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும், 1990-ம் ஆண்டு சிறுபான்மை சமுதாய உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்படி பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும் பட்டியல் சாதியினராகச் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.
ஆனால், இந்து மதத்தில் மட்டுமே தீண்டாமை இருப்பதாகவும், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் தீண்டாமை இல்லை என்றும் தொடர்ந்து தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளும் கூறி வருகிற நிலையில், அந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்... அப்படியானால் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை முதல்வர் ஸ்டாலின், தொல்.திருமாவளவன் போன்றோர் ஒப்புக்கொள்கின்றனரா... அப்படியானால் எந்தத் தீண்டாமைக்காக மதம் மாறினார்களோ அதே தீண்டாமை மற்ற மதங்களிலும் இருப்பதால் இந்து மதத்துக்கே திரும்புமாறு ஸ்டாலினும், திருமாவளவனும் அழைப்பு விடுவார்களா...திருமாவளவன் - ஸ்டாலின்
அப்படி இட ஒதுக்கீடு அளிக்கும் நிலையில், பட்டியலின மக்கள் தொகை அதிகரித்து ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டில் பல்வேறு குழப்பங்கள் உருவாகாதா... நீண்ட நாள்களாக அவதியுற்று வரும் பட்டியலின மக்கள் பெரும் போட்டியைச் சந்திப்பதன் மூலம் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட மாட்டார்களா... நாடு முழுவதும் கடும் பிரச்னைகள் ஏற்பட்டு பட்டியலின மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகாதா... பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி மக்களைச் சின்னாபின்னமாக்கவே இந்தத் தீர்மானம் வழிவகை செய்கிறது.
இந்திய தலைமைப் பதிவாளரின் 2001 அறிக்கையின்படி, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறியவர்கள் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும், பல்வேறு சாதியப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்ட நிலையில், இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்கள் அனைவரையும் பட்டியலினத்தில் சேர்ப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களை பட்டியலினத்தில் சேர்ப்பதன் மூலம் கிறிஸ்தவம், இஸ்லாமிய மதங்களில், இந்திய நாடு சாதியைத் திணிப்பதாக உலகம் முழுவதும் பிரசாரம் செய்து இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க நமக்கு எதிரான நாடுகள் முயலும்.ஸ்டாலின்
மேலும், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கை 2007-லேயே அளிக்கப்பட்ட நிலையில், தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, அதன் பிறகு ஏழு வருடங்கள் ஆட்சியில் இருந்தும், அந்த அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தாதது ஏன்... நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களில் தீண்டாமை இருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பதை ஸ்டாலினும், அந்த மதத்தினரும் ஏற்றுக்கொள்வார்களா... இதுவரை இந்து மதத்தில் மட்டுமே தீண்டாமை இருந்ததாகக் கூறி இழிவுபடுத்தி வந்தவர்கள் வருத்தம் தெரிவிப்பார்களா...
மத்திய அரசு ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையை முழுமையாக நிராகரித்திருப்பதோடு, நீதியரசர் கே.பாலகிருஷ்ணனின் தலைமையில் குழுவை அமைத்து இந்த விவகாரம் குறித்து அறிக்கையைக் கேட்டிருக்கிறது. கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வழக்கு கடந்த இருபது வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிற நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த தனித் தீர்மானம் மதங்களுக்கிடையே பிளவை உருவாக்கவே வழிவகை செய்யும்.நாராயணன் திருப்பதி
சாதிகளே இல்லை என்று சொல்கிற மதங்களில், ஓட்டுக்காக சாதிய இட ஒதுக்கீடு கேட்டு மக்களைத் தூண்டிவிடும் தி.மு.க அரசின் மதவாதப் போக்கை பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கிறது. இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களில் சாதியப் பிளவுகள் இருக்கிறது என்றும், தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் ஸ்டாலின் கூறுகிறாரா... அப்படி உறுதிசெய்வாரேயானால் இதுவரை இந்து மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கியதற்கு தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையேல் இந்தத் தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும்" என நாராயணன் திருப்பதி வலியுறுத்தியிருக்கிறார்.`கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்துக்கு மாறினாலும் தீண்டாமை தொடரும் என திமுக அரசு சொல்கிறதா?’ - வானதி காட்டம்
http://dlvr.it/SmmvnJ
http://dlvr.it/SmmvnJ