கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக ‘DMK files’ என்னும் பெயரில் திமுக தலைவர்கள், அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை வெளியிட்டார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில், அவர் வெளியிட்டது ஊழல் பட்டியல் அல்ல, வெறும் சொத்துப்பட்டியல் என்னும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் திமுக மீது புகார் சொல்லியிருக்கிறார்.
`மகளிர் உரிமைத்தொகை 80 சதவிகிதப் பெண்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை’ என பாஜக மநிலத் தலைவர் கூறியது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், `2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் கறுப்புப் பணத்தை ஒழித்து, மக்கள் அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் 15 லட்சம் போடுவதாகப் பிரதமர் மோடி சொன்னார். அதைச் செய்தாரா?' என்னும் கேள்வியை முன்வைத்தார். உதயநிதி ஸ்டாலின்
இதற்கு பதிலடி தரும் விதமாக தமிழ்நாடு பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``ரூ.15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி உதயநிதி ஸ்டாலின் புலம்பிவருவதாகத் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளையடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுரக் குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி. சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும். 1,000 கோடி ரூபாய் ஊழலுக்குப் பேர்போன துபாய் நோபல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையும் ஒரே முகவரியில் எப்படி இயங்கிவருகின்றன என்பதைத் தெளிவுபடுத்துவீர்களா?” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அமைச்சர் திரு @Udhaystalin, தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன்.
ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி.
சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல…— K.Annamalai (@annamalai_k) July 12, 2023
அண்ணாமலை சொல்லும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?
இது குறித்து நம்மிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நாராணயனன் திருப்பதி, ``திமுக தலைவர்கள்மீது குற்றச்சாட்டை முன்வைத்து ‘DMK files’ என்பதை வெளியிட்டார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. அதில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு வைத்தபோதே, இந்த துபாய் நோபல் பிரிக்ஸ் பற்றிய குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 2009-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் இயக்குநராக உதயநிதி ஸ்டாலின் இருந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு தொடங்கி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இயக்குநராகத் தொடர்ந்திருக்கிறார். அவர்கள் நிறுவனத்துக்கு முதலீடு ஒப்பந்தம் போடத்தான் முதலமைச்சர் துபாய்க்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். அந்த நிறுவனத்துடன் ரூ.1,000 கோடி ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இது யாருடைய பணம். இதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என அன்றே கேட்டிருந்தார். அதைத்தான் தற்போதும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அதில் உதயநிதி பெயர் இருக்கும் புகைப்படமும் பதியப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் வலைதளத்தைப் பார்த்தாலே உங்களுக்கு ஆதாரம் கிடைக்கும்” என்றார். நாராயணன் திருப்பதி
திமுக அமைச்சர் திரு @Anbil_Mahesh நோபல் நிறுவனத்தில் 2016ஆம் ஆண்டு இயக்குனராக இருந்திருக்கிறார்.
துபாய் சென்ற தமிழக முதல்வர் திரு @mkstalin, நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்திடம் 1000 கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். (2/3)— K.Annamalai (@annamalai_k) April 15, 2023
இது குறித்து நம்மிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜ், ``அண்ணாமலை ’நோபல் பிரிக்ஸ்’ தொடர்பாக ஒரு குற்றச்சாட்டை முன்பே வைத்தார். அது தொடர்பாகச் சில தகவல்களை வெளியிட்டார். ஒருவேளை, அது உண்மையாக இருந்தால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கும். நோபல் பிரிக்ஸ் பற்றி அண்ணாமலை எத்தனை முறை பொதுவெளியில் பேசியிருக்கிறார்... ஆனால், அதற்கான ஆதாரம் எங்கே... அதேவேளையில், சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு அமலாக்கத்துறை இயக்குநராகப் பதவி நீட்டிப்பு கொடுத்தது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் சொல்லியதிலிருந்து அமலாக்கத்துறையைக் கைக்குள் வைத்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சிவ ஜெயராஜ்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ததாக மருத்துவர்கள் பொய்யாக ’மருத்துவச் சான்றிதழ்’ வழங்கியதாகக் கூறுகிறார் பாஜக-வின் ஹெச்.ராஜா. இது ஒரு தரமான அரசியல்வாதி சொல்லும் கருத்தில்லை. இது பொதுமக்களைத் திசைதிருப்பும் செயல். தவிர, 48 மணி நேரத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்கிறார் அவர். மகாரஷ்டிராவில் நடந்ததுபோல், இங்கும் ஆட்சி மாறும் என மிரட்டிப் பார்க்க முயல்கிறதா பாஜக... இல்லையெனில், எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது என்பதுதான் பாஜக-வின் நோக்கமா... அப்படியே உங்களுக்கு வலிமை இருந்தால் ஆட்சியைக் கலைத்துப் பாருங்களேன். நாங்கள் சவால்விடுகிறோம்.
மேலும், அண்ணாமலையின் மனைவி பெயரில் இயங்கும் அறக்கட்டளை, சுமார் 1,536 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை ஆதரத்தோடு விரைவில் திமுக வெளியிடும். அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். அதேபோல், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், அண்ணாமலையின் பெயரைச் சொல்லித்தான் இயக்குநர்கள் பண மோசடி செய்ததாகப் புகாரிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி மோசடிப்பேர்வழியாக இருந்துகொண்டு, திமுக-மீது புகார் சொல்ல அண்ணாமலைக்கு எந்தத் தகுதியும் இல்லை. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எனவே, தமிழகத்தில் இவர்கள் சொல்வது எடுபடாது. திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு - பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்.
அறக்கட்டளை தொடர்பான புகாருக்கு பதில் சொல்லிவிட்டு எங்கள்மீது குற்றச்சாட்டை வைக்கட்டும். அப்படியே எங்கள்மீது புகார் சொல்ல ஆதாரம் இருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும். இல்லையென்றால், ஆளுநரை நேரில் சந்தித்து புகாரைக் கொடுக்கட்டும். புகார் சொல்வதென்றால், சரியான ஆதாரத்தை வெளியிட வேண்டும். ஆதாரத்தை வெளியிட்டுப் பேசுவதுதான் தார்மிக அடிப்படை. அதுதான் அரசியல் தலைவருக்கும் அழகு” என்றார் காட்டமாக.DMK Files: ``அண்ணாமலைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை உறுதி!" - ஆர்.எஸ்.பாரதி
http://dlvr.it/SsFbpQ
http://dlvr.it/SsFbpQ