`போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குப் பின்னால் அ.தி.மு.கவின் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. தேர்தல் வரும் நேரத்தில் இதுபோன்று செய்தால், மக்களுக்கு தி.மு.க அரசின்மீது கோபம் வரும் என்ற நோக்கத்தில்தான் இதைச் செய்கிறார்கள்' என தி.மு.க கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறது. வேலை நிறுத்தம் : போக்குவரத்து தொழிற்சங்கங்கள்
வெடித்த வேலை நிறுத்த போராட்டம்:
நீண்ட காலமாக போக்குவரத்து தொழிலாளர்கள் முன்வைத்து வரும் 6 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற முடியாது எனக்கூறிவிட்டதால், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைச் சூழல் என்பதால் இவற்றை சமாளிப்பதற்காக தி.மு.கவின் தொ.மு.ச, காங்கிரஸின் ஐ.என்.டி.யு.சி தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்கள் நடத்துனர்களை வைத்து பெரும்பாலான அரசுப் பேருந்துகளை இயக்கி வருகிறது தமிழ்நாடு அரசு. அதேசமயம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பேருந்துபோக்குவரத்து சிறிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தற்காலிக ஓட்டுநர்களின் அனுபவமின்மையால் சில விபத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நெருங்கும் பொங்கல்... போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் - எப்படி சமாளிக்கப் போகிறது அரசு?!
நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக, `தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பும்போது கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப் படியை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், போக்குவரத்துத்துறையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்' உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வபோது போராடி வருகின்றனர். அந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில், `தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, பி.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் அறிவிப்பை வெளியிட்டனர். அரசு போக்குவரத்து கழகம்
தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகள்:
அதையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை வாபஸ் பெற வைப்பதற்காக போக்குவரத்துத்துறை, தொழிலாளர் நலத்துறை ஆணையம் சார்பாக டிசம்பர் 27, ஜனவரி 3 மற்றும் ஜனவரி 8-ம் தேதி என அடுத்தடுத்து நடைபெற்ற மூன்றுகட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. குறிப்பாக அரசு தரப்பில், ``பொங்கல் சூழலில் போராட்டம் நடத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும், இவை நீண்டகாலப் பிரச்னை என்பதால் இவற்றையெல்லாம் தீர்க்க கால அவகாசம் தேவைப்படும். எனவே, இந்தப் பிரச்னையை பொங்கலுக்குப் பிறகு பேசித் தீர்த்துக்கொள்ளலாம்'' எனத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலர்கள், அரசு அதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், `மொத்தமுள்ள 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை நிறைவேற்றித்தர சம்மதம் தெரிவிக்கிறோம். மற்ற கோரிக்கைகளை பொங்கலுக்குப் பிறகு பரிசீலிருக்கிறோம். தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை காரணத்தால் உடனடியாக அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றித்தர முடியாது' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். வேலைநிறுத்தம்!
தொடங்கியப் போராட்டம், பாதிக்கப்படும் பொதுமக்கள்:
இதனால் அதிருப்தியடைந்த போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், ``கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இதையேத்தான் இரண்டு அரசுகளும் மாறிமாறிப் பேசி இழுத்தடித்துக்கொண்டிருக்கிறீர்கள் எனக்கூறி, திட்டமிட்டபடி ஜனவரி 9-ம் தேதி முதல் காலவரையற்றை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக, தி.மு.க-வின் தொ.மு.ச மற்றும் காங்கிரஸின் ஐ.என்.டி.யு.சி போக்குவரத்துத் தொழிலாளர்களைத் தவிர, அ.தி.மு.க-வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 20-க்கும் மேற்ப்பட்ட போக்குவரத்து தொழிற்சங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம், தி.மு.கவின் தொ.மு.ச, காங்கிரஸின் ஐ.என்.டி.யு.சி தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்கள் நடத்துனர்களை வைத்து பெரும்பாலான அரசுப் பேருந்துகளை இயக்கி தற்காலிகமாக சமாளித்து வருகிறது தமிழ்நாடு அரசு.
வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்:
இந்த நிலையில், `போராடிவரும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தரவேண்டும், பொங்கல் சூழலில் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருப்பதை அரசு உறுதிசெய்யவேண்டும்' என அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்துதெரிவித்திருக்கின்றன. குறிப்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடி உள்ளதாகவும், அதில் இந்த மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கினால்கூட போதும் என்றும், அதற்கு ரூ.70 கோடி மட்டுமே ஆகும் என்றும், நிலுவையில் உள்ள 96 மாதகால அகவிலைப்படியையும் மற்றும் இதர கோரிக்கைகளையும் பொங்கலுக்குப் பிறகுகூட பேசிக் கொள்ளலாம் என்றும், இதனை இந்த அரசு ஏற்றுக்கொண்டால் வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்த குறைந்தபட்ச இந்த ஒரு கோரிக்கையைக் கூட ஏற்காத மனிதாபிமானமற்ற அரசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. அரசு வீராப்பு காட்டாமல், லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய குறைந்தபட்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விடியா தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்!" என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.அதிமுக | எடப்பாடி பழனிசாமி
அரசியல் உள்நோக்கம் - குற்றம்சாட்டும் தி.மு.க:
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசியிருக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், ``போக்குவரத்து தொழிலாளர்களுக்காக நீலிகண்ணீர் வடிக்கும் எடப்பாடி! 96 மாத காலமாக ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என உங்கள் அறிக்கையிலே சொல்லியிருக்கிறீர்களே, அதை நிறுத்தியதே நீங்கள் தானே! 65 மாத காலம் அகவிலைப்படி கொடுக்காமல் இருந்தது நீங்கள் தானே! இதை சொல்லி பேருந்தை நிறுத்தினால், மக்கள் தி.மு.க அரசு மீது கோபப்படுவார்கள் எனது உங்கள் கற்பனை. ஆனால் உங்கள் வேடம், உங்கள் அறிக்கையாலேயே கலைந்து விட்டது. மக்கள் உண்மையை அறிவார்கள். மக்களுக்கு இடையூறாக பொய் சொல்லி ஒரு போராட்டம் நடத்துவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!" என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.அமைச்சர் சிவசங்கர்
மேலும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ``போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடனான பேச்சுவார்த்தையின்போது, அரசால் என்ன செய்ய முடியும். எதை செய்வது கடினம் என்பது குறித்து தெளிவாகக் கூறியிருக்கிறோம். கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்கள் செய்யாமல் விட்டதை, தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு அ.தி.மு.க தொழிற்சங்கத்தினர் கேட்பதும், எடப்பாடி பழனிசாமி கேட்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அவர்களால் செய்ய முடியாமல் விட்டுவிட்டனர். அதை நாங்கள் செய்யமுடியாது என்று கூறவில்லை. நிதி நிலை சீரான பிறகு செய்து தருகிறோம் என்று கூறியிருக்கிறோம். ஆகவே, செய்து தரவே முடியாது என்று கூறியவர்களுக்கு மத்தியில், நிதிநிலை சீரான பிறகு செய்து தருவோம் என்று கூறும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபவடுவது என்பது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவே அமையும். இது `அரசியல் உள்நோக்கம்' கொண்டது. தேர்தல் வரும் நேரத்தில் இதுபோன்று செய்தால், மக்களுக்கு அரசின்மீது கோபம் வரும் என்ற நோக்கத்தில்தான் இதைச் செய்கிறார்கள். ஆனால், பொதுமக்கள் இவற்றையெல்லாம் நன்கு அறிவார்கள். எனவே, பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதுதான் மக்களுக்கு கோபம் வரும்!" என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார்.ஏ.ஐ.டி.யு.சி, பொதுச் செயலாளர் ஆறுமுகம்
இதை அரசியலாகப் பார்க்க வேண்டாம்:
இதுதொடர்பாக ஏ.ஐ.டி.யு.சி, பொதுச் செயலாளர் ஆறுமுகத்திடம் பேசியபோது, ``9-ம் தேதிவேலை நிறுத்தம் தொடங்கப்பட்டிருக்கிறது. வெளி நபர்களை வைத்து 60% பேருந்துகள் அரசால் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இன்று 40%-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக நாளை மறுநாள் கூடும். அரசின் நடவடிக்கை காரணமாக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மிகுந்த வேதனையிலும் மன உளைச்சலிலும் உள்ளனர். அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராகி வருகின்றனர். தமிழக அரசு இதை அரசியலாக பார்க்காமல் தொழிலாளர்களின் கோரிக்கையை, தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முன் வரவேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம். தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி தொழில் அமைதி ஏற்படும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்!" எனக் கேட்டுக்கொண்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/T1Bp9p