திருச்சியில் தி.மு.க அரசைக் கண்டித்து திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வருகை தந்த அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"பா.ஜ.க - அ.ம.மு.க கூட்டணி உறுதியாகியுள்ளது. இன்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, கிஷன் ரெட்டி ஆகியோர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்களிடம் பா.ஜ.க-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்து விட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக பா.ஜ.க மாநில நிர்வாகிகள் மற்றும் மேலிட பொறுப்பாளர்களிடம் பேசி வருகிறோம். எங்களின் கோரிக்கைகள் சிலவற்றை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இன்று அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் மூன்றாவது முறையாக பா.ஜ.க-தான் ஆட்சி அமைக்கும். நரேந்திர மோடி பிரதமர் ஆவார். தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்று தர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அணிலைப்போல் செயல்படும். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம்... எங்கு போட்டியிடுவோம் என்பது பிரச்னை கிடையாது. எங்களின் தேவை பா.ஜ.க-விற்கு தெரியும். நியாயமான கோரிக்கையைத்தான் நாங்கள் வைத்துள்ளோம் என்பதும் தெரியும். எங்களை பா.ஜ.க தலைமை எந்த வகையிலும் நிர்பந்திக்கவில்லை. பேட்டியளிக்கும் டி.டி.வி.தினகரன்
தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என எந்த நிர்பந்தமும் எங்களுக்கு தரவில்லை. குக்கர் சின்னத்தில்தான் நாங்கள் உறுதியாகப் போட்டியிடுவோம். பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இணைந்தால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற கேள்வியைக் கேட்கிறீர்கள். தற்பொழுது நாங்கள் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அரசியலில் சூழல் மாறினாலும் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான திட்டங்களை பா.ஜ.க அரசு செயல்படுத்தினால், தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். தமிழ்நாட்டிற்கு எதிரான திட்டங்களை பா.ஜ.க தற்போது செயல்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக எந்த உறுத்தலும் இல்லாமல் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். பா.ஜ.க பல மாநிலங்களில் தொகுதி உடன்பாடு செய்து விட்டு தமிழ்நாட்டிற்கு தற்பொழுது வந்துள்ள காரணத்தால், இங்கு கூட்டணி, தொகுதி இறுதி செய்ய தாமதம் ஏற்பட காரணமாக இருக்கலாம். ஆனால், எங்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கடந்த 1999 -ம் வருடம் நடைபெற்ற தேர்தலின்போது, 'பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி கிடையாது' என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தார். மீண்டும் 2014-ம் ஆண்டு தேர்தலில் வேறொரு நிலைப்பாட்டை எடுத்தார். இன்று ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன நிலைப்பாடு எடுத்திருப்பார் என்பது அவருக்குத்தான் தெரியும். தற்பொழுது தமிழ்நாட்டின் நலனுக்காக நாங்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். ஏற்கெனவே, பா.ஜ.க எங்களை பற்றி புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று, அ.ம.மு.க பற்றியும், டி.டி.வி.தினகரன் பற்றியும் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் எங்களுக்குள் கூட்டணி அமைந்திருக்கும். ஆனால், சில காரணங்களால் அது அமையவில்லை. தற்பொழுது நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை பா.ஜ.க இந்தியாவின் வளர்ச்சிக்கான இயக்கம். பேட்டியளிக்கும் டி.டி.வி.தினகரன்
அவர்களின் கொள்கைகள் சில எங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், தற்போதைய சூழலில் இந்தியாவின் வளர்ச்சிக்கான இயக்கமாக பா.ஜ.க தான் உள்ளது. நாங்களும், ஓ.பன்னீர்செல்வமும் அரசியலில் இணைந்து பயணிக்க உள்ளோம் என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். அண்ணாமலை படித்த புத்திசாலி. அவர் என்னுடன் திறந்த மனதோடு பேசுகிறார். எனக்குப் பிடித்தமான நண்பராக இருக்கிறார். பா.ஜ.க-வோடு, அ.தி.மு.க கூட்டணி அமைத்தால் அப்பொழுது என்ன செய்கிறோம் என்பதைப் பாருங்கள். எடப்பாடி பழனிசாமிக்கும், எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்னையும் கிடையாது. துரோக புத்தியுள்ள பழனிசாமியுடன் இணைந்து பயணிப்பது எந்த காலத்திலும் சாத்தியமில்லை. ஒருவேளை அவர் துரோக சிந்தனையை விட்டு திரும்பி வந்தால், அவருடன் பயணிப்பது குறித்துப் பேசிக் கொள்ளலாம்" என்றார்.CAA: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய பாஜக அரசு; எதிர்க்கட்சிகளின் ரியாக்ஷன் என்ன?!
http://dlvr.it/T3xXYJ