திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம், கோணப்பட்டி. இந்த கிராமத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்வோரை ஊரை விட்டு ஒதுக்கிவைக்கும் அவலம் பல ஆண்டுகளாக நடந்து வருவதாகக் குற்றம்சாட்டுகின்றனர் ஊர் பொதுமக்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோணப்பட்டியைச் சேர்ந்த வினோத், "எங்கள் ஊரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 300 குடும்பங்கள் உள்ளன. ஊர் கோயில் திருவிழா நடத்துவது உள்ளிட்டவற்றுக்காக ஊர் கமிட்டி செயல்பட்டு வருகிறது. இந்த கமிட்டிக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறது. இந்த கமிட்டியை வழிநடத்த ஊர் நாட்டாமை இருக்கிறார். இவர்கள் மூலம் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் பல்வேறு அராஜகங்கள் நடந்து வருகிறது. வினோத்
நான் 5 ஆண்டுகளுக்கு முன் காரைக்குடியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். பிற சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துவிட்டதாகக் கூறி, என்னை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். என்னைப் போலச் சாதி மறுப்புத் திருமணம் செய்த 23 பேரை ஊரை விட்டு ஒதுக்கியுள்ளனர்.
எங்களை ஊர் திருவிழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவிடுவது இல்லை. எங்கள் குடும்ப நிகழ்ச்சிகளிலும் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.கோணப்பட்டி ஊர் கோயில்
ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களும் காதலித்து திருமணம் செய்தால், அவர்களுக்கும் தண்டனை உண்டு. அதாவது காதலித்தவர்களின் பெற்றோர், உறவினர் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களின் இறுதிச் சடங்கில்கூட கலந்துகொள்ள விடாமல் தடுக்கிறார்கள். சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களின் பெற்றோர் இறந்துவிட்டால், அவர்களை அந்த ஊர் மயானத்தில்கூட அடக்கம் செய்யவிடுவது இல்லை.
இதுதவிர, கிராமக் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது; பொதுகுழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது; ஊராருடன் பேசக் கூடாது; சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களின் நிலங்களில் விவசாயப் பணிகளுக்கு யாரும் செல்லக் கூடாது எனப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்." என்றார் குமுறலாக.சந்தோஷ்குமார்
தொடர்ந்து பேசிய சந்தோஷ்குமார், "இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகக் கட்டுப்பாடு என்ற பெயரில் அராஜகம் அதிகமாகி வருகிறது. நான் காதல் திருமணம் செய்துகொண்டேன் என்பதற்காக என் தாத்தா, பாட்டி இறப்பு இறுதிச்சடங்கில்கூட என்னைப் பங்கேற்க விடாமல் செய்துவிட்டனர். என் அக்கா மகளுக்குச் சீர் செய்யவிடாமல் தடுத்தனர். இந்தக் கொடுமைகள் குறித்து சாணார்பட்டி காவல்துறை, வட்டாட்சியர், ஆர்.டி.ஓ., மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுக்கள் அளித்தோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை." என்றார்.
கிராம கமிட்டி செயலாளர் சேதுராமனிடம் பேசினோம். ''எங்கள் முன்னோர்கள் கிராம கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வந்தனர். தற்போது எவ்வித கட்டுப்பாடும் இல்லை. காதல் திருமணம் செய்தவர்கள் சிலரால் எங்கள் ஊரில் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் காதல் திருமணம் செய்தவர்களிடம் கோயில் நன்கொடை வாங்கிக் கொள்கிறோம். அவர்களின் இறப்பு வீடுகளுக்கு விருப்பப்பட்டவர்கள் செல்லலாம். அதில் நாங்கள் கட்டுப்பாடு எதுவும் விதிக்கவில்லை." என்றார்.கலெக்டர் பூங்கொடி
திண்டுக்கல் மாவட்ட மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசியபோது, ''இதுகுறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.
http://dlvr.it/TCvgKD