`மேக்கேதாட்டூவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கான கூடுதல் விவரங்களுடன் செப்டம்பர் 16 அல்லது 17-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரைச் சந்திக்க உள்ளார் கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜெர்க்கிஹோலி. தொடர்ந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
2017-ம் ஆண்டு ராம் நகர் மாவட்டம், கனகபுராவுக்கு அடுத்த மேக்கேதாட்டூவில் காவிரியாற்றின் குறுக்கே 9,000 கோடி பட்ஜெட்டில் பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்காக அணை கட்டப்பட்டும் என அறிவித்தது கர்நாடக மாநில அரசு. இதற்காக அந்தப் பகுதியில் ஆய்வு செய்து வரைபடம் உள்ளிட்ட தகவல்களுடன் வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் அனுமதிக்காக அனுப்பியது. நீர்வளத்துறை அமைச்சகம் கர்நாடக மாநில அரசு அளித்த திட்ட வரைவு அறிக்கையை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டது. இதையடுத்து கர்நாடகம் மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் அணை அமையவிருக்கும் ஒன்டிகுண்ட்லு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் கர்நாடக பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜெர்க்கிஹோலி. அப்போது அவர் பேசும்போது, ``5,051 ஹெக்டேர் வன நிலம் இந்த அணைக்காக கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 3,181 ஹெக்டேர் நிலம் காவிரி வனவிலங்கு சரணாலய நிலம், 1,870 ஹெக்டேர் நிலம் காப்புக்காடாகும். இந்த அணை அமையவிருக்கும் இடத்தில் 63 சதவிகிதம் நிலம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் கீழ் வருகிறது. இதைக் கையகப்படுத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.மேக்கேதாட்டூ அணை அமையவிருக்கும் இடம்
2019-ம் ஆண்டிலேயே விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். மத்திய நீர் கமிஷனின் கீழ் வரும் இயக்குநரகங்களின் ஆய்வில் இத்திட்டம் இருக்கிறது. விரைவில் இதற்கான பதில் கிடைத்துவிடும். மத்திய நீர்வள அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தவுடன் அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று டெண்டர் விட்டுவிடுவோம். 4 டி.எம்.சி தண்ணீர் பெங்களூரு குடிநீர் திட்டத்துக்காக அணையிலிருந்து எடுக்கப்படும். இதனால் தமிழகத்துக்குத் தரவேண்டிய தண்ணீரின் அளவில் எதுவும் பாதிக்கப்படாது” என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் ஆர்.சுப்ரமணியனிடம் பேசியபோது, ``கர்நாடகம் எப்போதும் இப்படியேதான் செய்து கொண்டிருக்கிறது. கர்நாடகம் எந்த முயற்சியை எடுத்தாலும் அதைத் தடுத்து நிறுத்த தமிழகம் தயாராக இருக்கிறது. காவிரியாற்று பிரச்னை நூறாண்டு கால பிரச்னை. அவற்றை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுக் கொடுக்கமாட்டோம். சின்ன சின்ன திட்டங்களுக்கெல்லாம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தடை போடுகிறது. 5,051 ஹெக்டேர் நிலம் இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது” என்றார்.வீரப்பன்
தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தைச் சேர்ந்த பொறிஞர் அ.வீரப்பன் பேசியபோது, ``கர்நாடகம் நினைப்பதெல்லாம் நடந்துவிடாது. மத்திய நீர்வளத்துறை கர்நாடகத்தின் திட்ட வரைவை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதே அனுமதி கொடுப்பதாக ஆகிவிடாது. அந்த அனுமதியெல்லாம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. அப்படியே அனுமதி கிடைத்தாலும் மத்திய வனத்துறை அமைச்சகத்திடம் அவ்வளவு எளிதில் அனுமதி பெற்றுவிட முடியாது. எப்போதும் தமிழகத்தைச் சீண்டிக் கொண்டே இருப்பது கர்நாடகத்தின் வேலைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. அதற்காகத்தான் ஆய்வு, அது இது என்று நாடகமாடி கொண்டிருக்கிறது கர்நாடகம்” என்றார் காட்டமாக.
http://dlvr.it/Rgfjyp
http://dlvr.it/Rgfjyp