கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூர் அரசு பியூ கல்லூரியில், ஹிஜாப் அணிந்துவந்த 6 இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. `ஹிஜாப்' அணிவது அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு வழங்கிய உரிமை, எங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி அந்த 6 மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த டிசம்பர் மாதம் உடுப்பி மாவட்டத்தில் தொடங்கிய இந்த சர்ச்சை அடுத்தடுத்து சிக்மகளூர், விஜயபுரா, ஷிமோகா, பத்ராவதி என சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்குப் பரவியது. அங்கும் கல்லூரி நிர்வாகத்தால் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. கல்லூரி மாணவிகள் - ஹிஜாப்
இந்து மாணவர்களும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் அவர்களுக்கு எதிராக நாங்களும் காவி அணிவோம் என்றுகூறி கழுத்தில் காவி துண்டுடன் `ஜெய் ஶ்ரீராம்' கோஷமிட்டு கல்லூரிக்கு வரவும் விவகாரம் பெரிதானது. அதேசமயம் காவி துண்டு மாணவர்களுக்கு எதிராகவும், போராடும் இஸ்லாமிய மாணவர்களுக்கு ஆதரவாகவும் கழுத்தில் நீலத் துண்டுடன் சில மாணவர்களும் `ஜெய்பீம்' கோஷத்துடன் கல்லூரிக்கு வருகை தந்தனர். இதனால் படிக்கும் மாணவர்களுக்குகிடையே மத மோதல்கள் ஏற்படும் பதற்றமான சூழ்நிலை உருவானது.
`மாணவர்களுக்கு இடையேயான பிரச்னை எதேச்சையாக நடைபெறவில்லை; மாணவர்களின் பின்னணியில் மத அடிப்படைவாதிகள் இருக்கின்றனர், அவர்கள்தான் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக படிக்கும் மாணவர்களிடத்தில் மத ரீதியிலான பிளவை ஏற்படுத்தி போராடத் தூண்டுவிட்டுக் கொண்டிருக்கின்றனர்' என இரண்டு தரப்பிலும் பரஸ்பரம் குற்றச்சாட்டு எழுப்பிவருகின்றனர்.ஹிஜாப்- காவி ஷால் -கர்நாடகா மத சர்ச்சை
நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம். ``பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்துவரும் மாணவிகள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு அரசுக் கல்லூரியின் நிர்வாகமே இப்படி செய்திருக்கிறது என்பதுதான் அபத்தம். இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவிகள் போராடுகிறார்கள். காலம்காலமாக இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், தற்போது திடீரென்று அந்தக் கல்லூரியில் படிக்கும் இந்து மாணவர்கள், இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வந்தால், நாங்கள் காவி துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வருவோம் என்றுகூறி ஜெய் ஶ்ரீராம் கோஷமிட்டபடியே கல்லூரிக்கு வந்திருக்கிறார்கள்.பேராசிரியர் அருணன்
இந்து மாணவர்களின் இந்த திடீர் நடவடிக்கைக்குப் பின்னால் நிச்சயமாக இந்துத்துவ பா.ஜ.க.வும், அதன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யும்தான் இருக்கிறது. மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் கர்நாடக பா.ஜ.க அரசு, இப்போது பள்ளி மாணவர்களிடத்திலும் செய்யத் தொடங்கிவிட்டது.
`ஹிஜாப் என்பது மத அடையாளம். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதுதான் மாணவர்கள் மத்தியில் மதபாகுபாட்டை உருவாக்குகிறது. ஆகவே கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தங்களின் மத அடையாளங்களுடன் வரக்கூடாது' என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் இந்து மாணவர்கள் விபூதி பூசிக்கொள்வது, சீக்கிய மாணவர்கள் டர்பன் அணிந்துகொள்வது, பிராமண மாணவர்கள் பூநூல் அணிந்துகொள்வது என எல்லாமே மத அடையாளம் தானே? இவை எதுவுமே போடக்கூடாது, எந்தவொரு மத அடையாளத்துடனும் வரக்கூடாது என்றுசொல்லியிருந்தால் சரி அதிலாவது நியாயம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது மட்டும்தான் பிரச்னை என்று சொல்லி தடைவிதித்தால், இது இஸ்லாமியர்கள் மீதான சங்பரிவாரங்களின் வன்மத்தையும், பாகுபாட்டையும்தான் வெளிப்படுத்துகிறது.பேராசிரியர் அருணன்
குறிப்பாக, ஹிஜாப் பெயரைச்சொல்லி இஸ்லாமிய மாணவிகளிடமிருந்து கல்வியைப் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம். இது ஹிஜாப் மீதான வெறுப்பல்ல, இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு! இதன் பின்னணியில் இருந்து செயல்படும் பா.ஜ.க-வின் நோக்கமே மத பாகுபாட்டை ஏற்படுத்துவது, இஸ்லாமிய வெறுப்பை திணிப்பது, இஸ்லாமிய மாணவிகளிடமிருந்து கல்வியை பறிப்பது ஆகிய மூன்றும்தான்!" என குற்றம் சாட்டினார்.கர்நாடகா கல்லூரி சர்ச்சை
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து நம்மைடையே பேசிய பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ``சீருடை என்பது மாணவ மாணவிகள் எல்லோரும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக கடைபிடிக்கக்கூடிய ஒரு கட்டுப்பாடு; ஒழுக்கம். ஆனால், மத ரீதியாக அழுத்தம்கொடுத்து, மத அடிப்படைவாதங்களை மாணவர்களிடத்தில் விதைப்பது என்பது தவறானது. இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறையில் ஹிஜாப் அணிந்து வருவது தவறு என்று கர்நாடக அரசாங்கம் சொல்லியிருப்பதில் தவறே இல்லை;
கடந்த 28-ம் தேதி கேரள அரசாங்கம், தேசிய மாணவர் படையில் உள்ள இஸ்லாமிய மாணவிகள் 'ஹிஜாப்' அணிவது மதச்சார்பின்மைக்கு எதிரானது, `சீருடை என்பது அனைவரும் ஒன்று என்ற உடுப்பு நெறியை போதிக்கும் கண்ணியத்தை வெளிக்காட்டுவது' என்றும், மத ரீதியான பழக்க வழக்கங்களை சீருடையோடு தொடர்புபடுத்துவது மற்ற மதத்தை சார்ந்தவர்களையும் அதே போன்ற கோரிக்கைகளை வைக்க தூண்டுவதோடு, மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவித்து, மாணவ சமுதாயத்தின் ஒழுக்கத்தை சீரழிக்கும் என்றுகூறு அனுமதி மறுத்திருக்கிறது. அப்போது அமைதியாக இருந்தவர்கள், கர்நாடகப் பள்ளி மாணவிகள் விஷயத்தில் மட்டும், மதச்சார்பின்மை கேள்விக்குறியாகிவிட்டது, மதச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்றெல்லாம் குரல்கொடுக்கிறார்கள். இவர்கள்தான் இரட்டை வேடமிட்டு, மதக்கலவரத்தை தூண்டுகிறார்கள்.நாராயணன் திருப்பதி
மேலும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால்தான் மாணவிகளுக்கு அழுத்தம் கொடுப்பட்டு, போராட்டம் தூண்டிவிடப்படுகிறது. இதனால் அந்த பள்ளிக் கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கிடையே மத ரீதியிலான இடைவெளிதான் ஏற்படும். அதேசமயம், 80% இந்துக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய ஒரு நாட்டின் அரசு கல்லூரிகளில் இந்துக்கள் மட்டும் சாமி கும்பிடலாமா என்று கேட்பதே மிகத்தவறு! இந்து என்பது மதம் அல்ல, பன்முகத்தன்மை கொண்ட ஒரு கலாசாரம். ஆகவே இது வேறு.நாராயணன் திருப்பதி
அவர்கள்தான் `நான் ஒரு இஸ்லாமியன். நான் ஒரு இஸ்லாத்தைச் சேர்ந்த பெண்' என்றுகூறி தங்களை தனித்து காண்பித்துக்கொள்கிறார்கள்! அது ஏன்? மாணவர்களுக்கு மத்தியில் எதற்கு இந்த பிரிவு? என்பதுதான் எங்கள் கேள்வி. பள்ளியின் சார்பில் வகுக்கப்பட்டுள்ள சீருடையை பின்பற்ற மாட்டேன்; எங்கள் மதத்தைதான் பின்பற்றுவேன் என்று சொன்னால் அது எப்படி சரியாகும்?" என கேள்வி எழுப்பினார்.
இந்த சர்ச்சைகள், பரஸ்பர குற்றச்சாட்டுகள் குறித்து கல்வியாளரும், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். ``ஹிஜாப் என்பது சீருடை கிடையாது. அனைவரும் அணிய வேண்டியப் பள்ளிச் சீருடையை மாணவிகள் அணிகிறார்கள். அவர்களின் நம்பிக்கை அடிப்படையில் சீருடையின் மேல் அணியும் ஆடையே ஹிஜாப். தங்களின் பண்பாட்டின் கூறான மறை நம்பிக்கையின் அடிப்படையில் ஆடைகள் அணிவது இந்தியர்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமையை பள்ளி நிர்வாகத்தாலோ, அரசினாலோ மறுக்க முடியாது. அணியும் ஆடை நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை தாண்டி வேறு எந்த நிபந்தனையும் விதிக்க இயலாது.பிரின்ஸ் கஜேந்திரபாபு
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக இருக்கக் கூடியவர், மதச் சார்பற்ற அரசிற்கு தலைமை தாங்குகிறார். அத்தகைய முதல் அமைச்சர் ஆய்வு செய்ய, விழாக்களில் பங்கேற்க பள்ளிகளுக்கு செல்கிறார். மாணவர்களுடன் உரையாடுகிறார். அத்தகைய அரசமைப்புச் சட்டப் பொறுப்பை (Constitutional Authority) வகிக்கும் ஒருவர் தான் நம்பிக்கை கொண்ட அவர் பின்பற்றும் மறையின் நம்பிக்கை அடிப்படையில் ஆடை அணிய அவருக்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது.பிரின்ஸ் கஜேந்திரபாபு
அரசமைப்புச் சட்டம் அனைத்து இந்தியர்களையும் சமமாக பார்க்கிறது. மறை நம்பிக்கையின் அடிப்படையில் ஆடை அணிய முதல் அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு அரசமைப்புச் சட்டம் தரும் அதே உரிமை சாமான்ய இந்தியர்களுக்கும் தரப்பட்டுள்ளது" என திட்டவட்டமாக கருத்துத் தெரிவித்தார்.கர்நாடக உயர் நீதிமன்றம்
கர்நாடகா மட்டுமல்லாமல் தேசிய அளவில் பூதாகரப் பிரச்னையாக விவாதிக்கப்பட்டுவரும் ஹிஜாப் விவகாரம் நாடாளுமன்றத்திலும் வெடித்தது. இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பும் செய்தனர்.
ஹிஜாப் அணிவது தொடர்பாக மாணவிகள் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அதன்மீதான விசாரணை நேற்று தொடங்கியது. ``நான் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்தவன்; அரசியலமைப்புச் சட்டம்தான் எனக்கு பகவத் கீதை; எனவே என் உணர்வுகளை ஒதுக்கிவைத்துவிட்டுத்தான் இந்த வழக்கை விசாரிப்பேன்” என்று கூறியே வழக்கு விசாரணையைத் தொடங்கியிருந்தார் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தீக்ஷித். மாணவிகள் தரப்பில், ``கல்வியாண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் அதுவரையிலாவது ஹிஜாப் அணிய அனுமதிக்கவேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.அரசு தரப்பிலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான ஆடையை அணியக்கூடாது எனவும், ஆடைக்கட்டுப்பாடுகளில் பிரச்னை இருந்தால், அதை கல்லூரி வளர்ச்சி குழுக்களிடம்தான் முறையிடவேண்டும் எனவும் வாதிடப்பட்டது. ஆனால், மாணவிகள் பொதுவெளியில் ஹிஜாப் அணியும்போது ஏற்படாத பிரச்னை, ஏன் பள்ளி வளாகங்களில் மட்டும் ஏற்படுகிறது என மாணவிகள் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நிதிபதி. வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் மதியம் 2:30 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவித்திருக்கிறார். அதுவரைக்கும் போராட்டக்காரர்களை அமைதி காக்கும்படியும் கோரிக்கை விடுத்திருக்கிறார்!
http://dlvr.it/SJdh5X