உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், பா.ஜ.க பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 2017-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்த தொகுதிகளான 403-ல், 312 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றது. அப்போது முதல்வர் வேட்பாளராக யாரையும் பா.ஜ.க முன்னிறுத்தவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு காரணமாகவே அந்த வெற்றியை பா.ஜ.க பெற்றது.யோகி
அந்த வெற்றிக்குப் பிறகுதான், கொரக்பூர் தொகுதி நாடாமன்ற உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத்தை முதல்வர் நாற்காலியில் பா.ஜ.க அமரவைத்தது. ஐந்து ஆண்டு காலம் முதல்வராக இருந்த யோகி ஆதித்யநாத் தலைமையில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை பா.ஜ.க எதிர்கொண்டது. கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க பெற்றுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க-வுக்கான வெற்றிவாய்ப்பு வெளிப்பட்டிருந்தது.
இது, யோகி ஆதித்யநாத் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற ஆட்சிக்கு கிடைத்த வெற்றியா, அல்லது மோடி அலையா என்கிற விவாதம் அரசியல் ஆர்வலர்களிடையே நடைபெற்றுவருகிறது. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக சட்டம் ஒழுங்கு சொல்லப்படுகிறது. யோகியின் ஆட்சியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது என்று அவரின் ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள். அதற்கு முன்பாக, சமாஜ்வாதி ஆட்சியில் குண்டர்களின் ராஜ்ஜியம் நடைபெற்றதாகவும், அந்த நிலையை யோகி ஆதித்யநாத் மாற்றிவிட்டார் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.யோகி, மோடி
யோகி தலைமையிலான ஆட்சியில் நூற்றுக்கணக்கான என்கவுன்டர் படுகொலைகள் நடைபெற்றதாக விமர்சனம் இருக்கிறது. குண்டர்களின் அட்டகாசங்களை ஒடுக்குவதற்காகவே என்கவுன்டர்களை யோகி நடத்தினார் என்றும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு என்கவுன்டர்களை செய்வதில் தவறில்லை என்ற வாதத்தை பா.ஜ.க ஆதரவாளர்கள் முன்வைக்கிறார்கள். மேலும், மாநிலத்தின் அமைதிக்காக யோகி முன்னெடுத்த அத்தகைய நடவடிக்கைகளுக்கான மக்கள் அளித்துள்ள அங்கீகாரம்தான் இந்த வெற்றி என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
யோகியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று சொல்வதைப் போல, யோகியின் ஆட்சியில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்ற கருத்தையும் அவரின் ஆதரவாளர்கள் முன்வைக்கிறார்கள். மோடி, அமித் ஷா, யோகி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தில் இது பிரதானமாக முன்வைக்கப்பட்டது.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருந்துவரும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல திட்டங்கள் அங்கு தொடங்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் திட்டங்கள், மெட்ரோ ரயில் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வளர்ச்சித் திட்டங்களிலும் கவனம் செலுத்துகிறார் என்கிற இமேஜை யோகிக்கு இது கொடுத்தது. அந்த இமேஜ், தேர்தலின் வெற்றிக்கு பயன்பட்டுள்ளது என்பதை தேர்தல் முடிவுகளில் பார்க்க முடிகிறது.அமித்ஷா, யோகி, மோடி
2017 சட்டமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க பெற்ற மிகப்பெரிய வெற்றிக்கு மோடி அலைதான் காரணம் என்று பார்க்கப்பட்டது. தற்போதைய வெற்றியிலும் மோடிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பது மறுக்க முடியாதது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆதரவு மனநிலை கொண்ட மக்கள் மத்தியில் இப்போதும் மோடி தான் கதாநாயகன்.
இந்த நிலையில், மோடிக்கும் யோகிக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக கடந்த பல மாதங்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தனக்கு போட்டியாக வருவார் என்பதால் யோகிக்கு எதிரான நிலைப்பாட்டில் பிரதமர் மோடி இருப்பதாகச் சொல்லப்பட்டது. கடந்த ஆண்டு யோகியின் பிறந்த நாளுக்கு மோடி வாழ்த்துச் சொல்லாததற்கு இதுதான் காரணம் என்றெல்லாம்கூட கூறப்பட்டது. அது உண்மையல்ல என்று பா.ஜ.க தரப்பில் விளக்கம்கூட கொடுக்கப்பட்டது.டாஸ்மாக்: `குறைந்தபட்சம் லேபிளை மாற்ற அவகாசம் தரப்பட்டிருக்க வேண்டும்!’ - குமுறும் விற்பனையாளர்கள்
ஆனாலும் யோகி, மோடி இடையிலான பனிப்போர் தொடர்பான செய்திகள் வந்துகொண்டுதான் இருந்தன. மோடியின் செல்வாக்கு குறையுமானால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் யோகியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ் முடிவெடுக்கும் என்றெல்லாம்கூட அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு மத்தியில், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் யோகியும் மோடியும் கைகோத்து பிரசாரக் களத்தில் குதித்தனர். கடந்த ஐந்தாண்டுகளில் சிறப்பான ஆட்சியை யோகி வழங்கியிருக்கிறார் என்று மோடி நற்சான்றிதழ் வழங்கினார்.யோகி
உத்தரப்பிரதேசத்துக்கு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவருவதில் பிரதமர் மோடிக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதை மக்கள் பார்க்கத் தவறவில்லை. அதே நேரத்தில், முதல்வராக இருந்து மாநிலத்தில் ஆட்சி செய்கிற யோகியை தங்களுக்கு நெருக்கமானவராகப் பார்க்கும் உத்தரப்பிரதேச மக்கள், யோகியின் செயல்பாடுகளை பிரதானமாகப் பார்க்கிறார்கள் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. 2017-ல் வீசியது மோடி அலையாக இருக்கலாம். அந்த அலை 2022-ல் குறைவாகவே வீசியிருக்கிறது என்றும், யோகியின் ஆட்சியே வாக்குகளை அள்ளிக்குவித்திருக்கிறது என்பதும் அரசியல் விமர்சகர்களின் வாதமாக இருக்கிறது.
http://dlvr.it/SLQjyk