தொண்டர்கள் வாக்குச் சேகரிப்பு, நிர்வாகிகளின் பேரணி, தலைவர்கள் பொதுக்கூட்டம் என இறுதிக்கட்டத்தை நோக்கி பயணிக்கிறது ஈரோடு இடைத்தேர்தல். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதோடு, நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். புதன்கிழமையன்று சீமான் வாகனப் பேரணியில் ஈடுபட்டபோது, தி.மு.க-வினர் கற்களைக் கொண்டு தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பான மோதலில் இரு கட்சித் தொண்டர்கள், போலீஸார் காயமடைந்தனர். வார்த்தைப் போர் முற்றி, தேர்தல் களத்தில் அடிதடி சம்பவங்களும் அரங்கேறியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் உத்தரவின்படி, நடக்கவிருந்த நா.த.க-வின் பொதுக்கூட்டமும் சில நிமிடங்களிலேயே முடித்துக்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. 'நாம் தமிழர்' காளியம்மாள்
இந்த மோதல் சம்பவம் குறித்து நம்முடன் பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள், “மாலை பேரணி, பின்னர் பொதுக்கூட்டம் என எப்போதும் போல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டோம், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றிருந்தார். இதற்கு முறையான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பிரசாரம் நடந்துகொண்டிருக்கும்போது, மாடியிலிருந்தவாறு கற்களையும் தடிகளையும் வீசி, சீமான் அவர்களைத் தாக்க முயன்றனர் தி.மு.க-வினர். ஏற்கெனவே பேனா நினைவுச்சின்னம் விவகாரத்தில் தி.மு.க-வினர், `தாக்குவோம், வெட்டுவோம்' எனப் பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தனர், அதன் நீட்சியாகவே இந்தச் சம்பவத்தை நாங்கள் பார்க்கிறோம்.சீமான்
தி.மு.க-வினர் கற்களையும், தடிகளையும் உடன் வைத்துக்கொண்டு பிரசாரம் செய்கின்றனரா... அவர்கள் பிரசாரம் செய்ய வரவில்லை. நா.த.க பிரசாரம் செய்தால், தங்கள் வேட்பாளர் வெல்ல முடியாது என்ற அச்சத்தில் தாக்குதல் நடத்தும் எண்ணத்தோடு மட்டுமே தி.மு.க-வினர் அந்தப் பகுதிக்கு வந்திருக்கின்றனர். சீமான் பேசினால் மக்கள் விழிப்படைந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், நாம் தமிழர் வென்றுவிடும் என்ற பயம் தி.மு.க, காங்கிரஸுக்கு வந்துவிட்டதால்தான் இப்படித் தாக்குதலில் இறங்கியிருக்கின்றனர்.காயமடைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்
நா.த.க வேட்பாளர் மேனகா நவநீதன் அனுமதி பெறாத தெருக்களில் பிரசாரம் மேற்கொண்டாரென அவர்மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆனால், தி.மு.க-வினரின் அனுமதி பெறாத பணிமனைகள் மூடப்பட்ட நிலையிலும், அவர்கள்மீது வழக்கு பதிவாகவில்லை. குறைந்தபட்ச ஜனநாயகம்கூட இந்தத் தேர்தலில் கடைப்பிடிக்கப்படவில்லை. பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் தருகிறார்கள், மக்களைச் சந்திக்கவிடுவதில்லை, இவ்வளவு அராஜகங்களைச் செய்த பிறகும் ரௌடிசம் செய்வதை எப்படி ஏற்க முடியும்... நா.த.க நிர்வாகிகள் யாருக்கும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் பிரசார களத்திலிருக்கும் தி.மு.க நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும்தான் பொறுப்பு" என்றார்.திருமங்கலத்தை மிஞ்சும் ஈரோடு பார்முலா!ராஜீவ் காந்தி
இந்த விவகாரம் தொடர்பாக நம்முடன் பேசிய தி.மு.க மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி, “சீமானும் நாம் தமிழர் கட்சியினரும் தேர்தல் களம் என்பது யுத்தம் என நினைத்துக்கொண்டு அநாகரிகமாகப் பேசுவது, தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதெல்லாம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உழைக்கும் மக்களான அருந்ததியினர் சமூக மக்களை `வந்தேறிகள்' எனப் பேசியதால் அவர்கள் பிரசாரம் செய்யவிடாமல் மக்கள் எதிர்க்கின்றனர்.
மேடைகளில் வீர வசனம் பேசுவதால் யதார்த்த களத்தில் மக்கள் கோபப்படுகிறார்கள். சீமானின் நோக்கம் தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. நாம் தமிழர் கட்சியினர் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பேசி வருவதால் காயப்பட்ட மக்கள் தாக்க முற்படுகிறார்கள். சமீபத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் யார் முதலில் அடித்தார்கள் என்பது விசாரணையில் தெரியும்” என்றார்.ஈரோடு கிழக்கு; திமுக - நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல்; இருவர் கைது - என்ன நடந்தது?
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். ``ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மூன்றாமிடத்தில் இருக்கிறார். கடந்த முறை கிட்டத்தட்ட 11,000 வாக்குகளைப் பெற்ற நிலையில் இந்த முறை அதற்கும் அதிகமான வாக்குகளை வாங்க வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது. அதே சமயம் அருந்ததியர் சமூகம் குறித்து சீமான் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருப்பதையும், நா.த.க-வினர் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் எதிர்ப்புகள் கிளம்புவதையும் பார்க்கிறோம். ஆகவே நாம் தமிழர் கட்சி பிரசாரம் செய்யும் இடங்களில் பாதுகாப்புகளைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
அதோடு கடுமையாக விமர்சித்துக்கொள்கிற தி.மு.க-வும் நா.த.க-வும் நேரடியாகச் சந்திக்கும் பகுதிகளில் சில கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் பிரசாரம் செய்ய நாம் தமிழர் கட்சியினர் முறையாக அனுமதி பெற்றிருந்த நிலையில், அந்த இடத்தில் எதிர்தரப்பினர் வந்து வாக்குவாதம் செய்து மோதல் ஏற்பட்டால் நாம் தமிழர் கட்சியினை எப்படிக் குறை சொல்ல முடியும்... பாதுகாப்பைப் பலப்படுத்தி மோதல் வராமல் பார்த்துக்கொள்வது போலீஸாரின் கடமை. மேலும் ஆளும் தரப்பு, போலீஸார் அவர்கள் பக்கம்தான் நிற்பார்கள் என்ற விமர்சனங்கள் எழுப்பப்படும் என்பதால் இந்த மாதிரியான விவகாரங்களில் தி.மு.க-வினர் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்" என்கிறார்.
``பட்டப்பகலில் பணப்பட்டுவாடா செய்யும் அரசியல் கட்சியினர், மக்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருக்கும் ஆளுங்கட்சியினர் என விதிமீறல்களும், அவலங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டுமெனத் தேர்தல் ஆணையம் நினைத்தால் தேர்தலை ரத்து செய்வதுதான் ஒரே வழி" என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத சுயேச்சை வேட்பாளர் ஒருவர்.பாதுகாப்புப்பணியில் காவல்துறை
``பிரசாரக் களத்தில் அரசியல் கட்சிகள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மேலும் பதற்ற சூழல்களில் கட்சி பேதமின்றி பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டியது காவல்துறையின் தலையாய பொறுப்பு" என சமூகச் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நெல்லை: சீமான் உருவ பொம்மை எரிப்பின்போது விபரீதம் - சப் இன்ஸ்பெக்டர் காலில் தீ பட்டதால் பரபரப்பு!
http://dlvr.it/SjwJzv